Tuesday, November 18, 2025
Huis Blog Bladsy 3

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்..!

0

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை வகிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெறும் விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது,

இன்றைய வாக்கெடுப்பில் எங்கள் தமிழரசுக் கட்சி அரசு சார்பாகவும் இல்லை, அரசுக்கு எதிராகவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் 2026 வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஏகமானதாக தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான முடிவு. நாம் எமது கட்சி ஜனாதிபதியின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவார், தமிழர் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வார், எமது மக்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவார்.

பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் கருத்துக்களை கேட்பார், நிலப்பிரச்சினைகளில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்தான் ஏகமனதாக கட்சியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் எதிர்க்க வேண்டிய நான்கு ஆண்டுகள் இன்னும் எங்களுக்கு உள்ளன

அடுத்த ஒரு ஆண்டிற்குள் எந்த முன்னேற்றமும் இல்லையெனில், அடுத்த ஆண்டு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராக இருக்கிறோம்.


தமிழரசு கட்சி இன்று வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பது நாம் அரசுடன் செயல்பட தொடர்ந்து தயாராக உள்ளோம் என்பதைக் காட்டும் ஒரு முக்கியமான செய்தியாகும்.

அத்துடன் எனது தகப்பனாரின் இறுதி அஞ்சலியில் பங்குபற்றிய மற்றும் துக்கம் விசாரித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரபுரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்; அகழ்வு தோல்வியில் நிறைவு..!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை தேடும் நோக்கில் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.ஹெச். மஹ்ரூஸ் நேரடி மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன.

விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தது.


நீதிமன்றத்தில் 10 அடி ஆழம் வரை அகழ்வதற்கு அனுமதி பெறப்பட்டு பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தது.

குறித்த பகுதியில் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் அப்பகுதியில் அருகாமையில் அகழ்ந்து பார்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு உரிய தரப்பினர் கோரிய நிலையில் பிறிதொரு நாளிற்கு அனுமதிக்கு கோருமாறு நீதிபதி கூறியிருந்ததுடன், குறித்த அகழ்வு இடம்பெற்ற பகுதியை மூடுமாறு நீதிபதி உத்தரவு வழங்கியதனையடுத்து மூடப்பட்டிருந்தது.

குறித்த தற்போது அகழ்வு இடம்பெற்ற பகுதியில் 2021ம் ஆண்டு அகழ்வு இடம்பெற்று எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டிருந்தது.


இருப்பினும் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவனை தாக்கிய பாடசாலை அதிபருக்கு பிணை..!

0

பாடசாலை மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கைது செய்யப்பட்ட அதிபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதிவான் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.


சந்தேக நபரைத் தலா மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்வி சீர்திருத்தம் எனும் போர்வையில் மூடப்படும் பாடசாலைகள் – வீதியில் இறங்கிய மாணவர்கள்

0

அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றது என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் கிராமப்புற பாடசாலைகளை மூடுவது பாடப்புத்தகங்களை இல்லாமல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பல்கலைக் கழக மாணவர் போராட்டம் வெடிக்கும் என கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்தில் ‘பாடசாலைகள் மூடப்படுகிறது பாட புத்தகங்கள் இல்லை, மாணவர்கள் கல்வியை விட்டு வெளியேற்றம், சீர்திருத்தத்தை தோற்கடிப்போம்’ எனும் தொனிப் பொருளில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தலைமையில் இன்று கையொழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இன்று வரை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏன் ஏமாற்றுகிறது.


இன்றைய இளைய சமூதாயத்தினர் நாளைய தலைவர்கள் அவர்களின் கல்வி தேவைக்காக ஒதுக்கப்படும் நிதியை இடை நிறுத்தினால் மாணவர்களின் கல்வி எந்தளவுக்கு செல்லும் மக்களே சிந்தியுங்கள்” என கூறியுள்ளனர்.

ஹெரோயினுடன் கைதான அதிபர் தொடர்பில் இலங்கை அதிபர்கள் சங்கம் போர்க்கொடி..!

0

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கடந்த மாதம் (5) கைது செய்யப்பட்டிருந்தார்.


குறித்த அதிபர் தொடர்பில் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிகாரி ‘அதிபர்’ எனக் குறிப்பிடப்பட்டாலும், அவர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல.

அவர் இலங்கை ஆசிரியர் சேவையின்அதிகாரி என்பது உறுதியாகியுள்ளதுடன், அவர் அதிபர் பதவியை தற்காலிகமாகப் பொறுப்பேற்று (Covering duties) பணியாற்றியுள்ளார்.

‘அதிபர்’ என்று அழைக்கப்படக்கூடியவர்கள் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் மாத்திரமே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் மேலும் கூறுகையில், அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் அல்லாதவர்கள் இவ்வாறு ‘அதிபர்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது அதிபர் சேவைக்கு செய்யப்படும் அநீதியாகும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், குறித்த அதிகாரியைப் பற்றிய தகவல்களை வெளியிடும் போது, ​​அவரை “இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி” என்று அடையாளப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்..!

0

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) தனது பதவியிலிருந்தும், அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 16, 2019 அன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர் கடந்த 34 ஆண்டுகளாக ஒரு அரசு அதிகாரியாக பணியாற்றியதாகக் கூறினார்.


அத்துடன் தேர்தல் ஆணையாளர் நாயகமாக தனது கடமைகளைச் செய்வதில் தனக்கு உதவிய அனைத்து முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி செயலாளர்கள், பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களுக்கு சமன் ஸ்ரீ ரத்நாயக்க தனது நன்றியைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று..!

0

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கடந்த நவம்பர் 7ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.


அதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலையின் விவாதம் நாளை (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக்க கூறுகையில், இந்த வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்காததால் அதற்கு எதிராக வாக்களிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சட்ட விரோதமாக சொத்துக்களை சேர்த்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

0

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபானக் கடத்தல்களில் ஈடுபட்டு அதன் மூலம் சொத்துக்களை ஈட்டிய எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி, சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினால் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் போது, மாஹிங்கொட, எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரின் மனைவி, சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி, 3 கோடி ரூபா பெறுமதியான மூன்று காணிகளையும், எஹெலியகொட இரத்தினபுரி வீதிக்கு அருகில் உள்ள 6 பேர்ச் காணியில் கடையுடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றையும் கட்டியுள்ளார்.


இதையடுத்து, சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள், பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 நாட்களுக்குச் செயலிழக்கச் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மாஹிங்கொட, எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஆவார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சேட்டை; சந்தேக நபர் கைது..!

0

கண்டி, பேராதனை வீதியில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் முகத்தில் உள்ள தழும்புகளுக்கு சிகிச்சை பெற வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் சேட்டை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கண்டி குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் ஒருவரை கைது செய்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

அந்த இளம் பெண் நேற்று (13) மதியம் சிகிச்சைக்காக மையத்திற்குச் சென்றிருந்த போது சிகிச்சைக்காக அவரிடம் ரூ.35,000 செலுத்துமாறு வைத்தியர் கேட்டுள்ளார்.


குறித்த பெண்ணிடம் ரூ.20,000 மட்டுமே இருந்ததால், மீதமுள்ள தொகையை பின்னர் செலுத்த யுவதி அவகாசம் கேட்டுள்ளார். இதன் போது ரூ.5,000 சிறப்புக் கழிவாகச் செலுத்தி, மீதமுள்ள ரூ.10,000 பின்னர் செலுத்த அனுமதிப்பதாக கூறியுள்ளனர்.

பின்னர் மருத்துவ நிபுணர் என்று கூறிக் கொண்ட குறித்த சந்தேக நபர், யுவதியின் உடலைப் பரிசோதிப்பதாக கூறி அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.


இச் சம்பவம் தொடர்பில் பெண் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது..!

0

யாழில் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று கொக்குவில் – கலட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

20, 21 மற்றும் 22 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!