Saturday, January 24, 2026
Huis Blog

கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி வவுனியா தாயகத்தில் கலந்துரையாடல்..!

0

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரல் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றினைந்து இன்று வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வவுனியா குருமன்காட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

அக் கலந்துரையாடலில்,

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2011ம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்படவிருந்த “கிவுல் ஓயா” நீர்ப்பாசனத் திட்டத்தை எந்தவிதமான மீளாய்வுமின்றி தற்போதைய அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ளமையானது தமிழ் மக்களுக்கு அதிலும் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்குவதாக உள்ளது.

மேற்படி திட்டத்தை நிறுத்தக் கோருவது தொடர்பான கூட்டம் இன்று (24.01.2026) வவுனியாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்ததுடன் இத் திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

கிவுல் ஓயா திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆபத்துக்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக எதிர்வரும் 30ம் திகதி (30/01/2026) வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை இத்திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சனைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வை காண்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்..!

0

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (24.01.2026) மாலை குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்த கூலர்ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் வவுனியா மாவட்ட செயலகம்..!

0

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு தமிழ் ஊடகவியலாளர்களை அழைக்காது சிங்கள ஊடகவியாலளர்களை மட்டும் அழைக்கப்படுவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியாவிற்கு அண்மையில் நீதித்துறை அமைச்சர் வருகை தந்திருந்ததுடன், ஊடக சந்திப்பு ஒன்றினையும் மாவட்ட செயலகத்தில் நடத்தியிருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் சிங்கள மொழி ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் தமிழ ஊடகவியலாளர் எவருக்கும் அழைப்பு வழங்கப்படவில்லை.

வவுனியா மாவட்ட செயலகத்தில் தொடர்பாடல் உத்தியோகத்தர் இருந்தும் தொடர்ச்சியாக பல நிகழ்வுகளுக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் புறககணிப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மாவட்ட செயலகத்தில் பல முறை தெரியப்படுத்தியும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் என்பவற்க்கும் முறையிடவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் வங்கி அதிகாரியின் மகளான சிறுமியின் கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட மாணவன்..!

0

க.பொ.த சாதாரணப் பரீட்சை நடைபெற இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று வரும் ஓ.எல் பரீட்சை எடுக்கவுள்ள 16 வயதான மாணவி படுக்கும் கட்டிலுக்கு அடியில் யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கற்று வரும் 18 வயதான ஏ.எல் மாணவன் பிடிபட்டுள்ளான். நேற்று மதியம் 3.00 மணியளவில் இச் சம்பவம் கொக்குவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

மாணவியின் தந்தை வங்கி ஒன்றில் பதவி நிலை அதிகாரி ஆவார். தாயார் அரச உத்தியோகத்தர். மூத்த மகளான குறித்த மாணவிக்கு தற்போது ஓ.எல் முன்னோடிப் பரீட்சை நடைபெற்று வருவதாகத் தெரியவருகின்றது. மாணவி பரீட்சை எழுதிவிட்டு தாயாருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.

தாயார் மாணவியை இறக்கிய பின்னர் மற்றைய மகளை பாடசாலையில் இருந்து ஏற்றுவதற்காக சென்ற போது சைக்கிளில் பாடசாலை சீருடையில் வந்த மாணவன் சைக்கிளை அருகில் இருந்த வர்த்த நிலையம் ஒன்றில் விட்டுவிட்டு நடந்து சென்று வீட்டினுள்ளே புகுந்துள்ளார். மற்றைய மகளை தாயார் வீட்டில் இறக்கிவிட்டு அலுவலகம் சென்றுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே உள்ளே சென்ற இரண்டாவது மகள் 3 மணியளவில் கத்திக் குளறி ஆர்ப்பாட்டம் செய்ததால் அயலவர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்துள்ளார்கள். அங்கு 16 வயது மாணவி படுக்கும் கட்டிலுக்கு அடியில் குறித்த மாணவன் பாடசாலை சீருடையுடன் பிடிக்கப்பட்டார்.

2வது மகளுக்கு அன்று ரியூசன் இருந்ததாகவும் ஆனால் அன்று மாணவி உடல் சுகவீனம் காரணமாக செல்லாததால் வீட்டில் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே மாணவன் இசகு பிசகாக மாட்டியுள்ளார். இரண்டாவது மகள் ஹோலுக்குள் இருக்கும் போது அறைக்குள் இருந்த கண்ணாடியை பார்த்து அதிர்ந்துள்ளார்.

குறித்த கண்ணாடியில் கட்டிலுக்கு கீழே ஒருவன் வெள்ளை ஆடையுடன் படுத்திருப்பதை கண்டே கத்தியுள்ளார்.இரண்டாவது மகள் கத்தும் போது மூத்த மகள் அவளது வாயை பொத்திப் பிடித்ததாக தெரிய வருகின்றது.

இருப்பினும் சகோதரி ஏன் இவ்வாறு தனது வாயை பொத்திப் பிடிக்கின்றார் என தெரியாது வீட்டு முற்றத்திற்கு வந்து இரண்டாவது மாணவி கத்திக் குளறியதாலேயே அயலவர்கள் உள்ளே நுழைந்துள்ளார்.

மாணவன் அங்கு வைத்து நையப்புடைக்கப்பட்டதுடன் மாணவியின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அதன் பின்னர் நடாத்தப்பட்ட விசாரணையில் மாணவியும் மாணவனும் காதலர்கள் என கூறியதாகத் தெரிய வருகின்றது.

குறித்த மாணவன் யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் உயாதரம் கற்பவன் என்பதுடன் பொறியியலாளர் ஒருவரின் மகன் எனவும் தெரிய வருகின்றது.

மாணவனின் பெற்றோரும் அங்கு வரவழைக்கப்பட்டு பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கபபட்டதாகவும் மாணவனை பிடித்த போது அயலவர்கள் சிலரால் எடுக்கப்பட்ட வீடியோக்களை இரு தரப்புக்களும் சேர்த்து அழிக்குமாறு கோரியதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் எந்தவித தவறான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மாணவன் முதல் முதல் மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளது மாணவன் வைத்திருந்த தொலைபேசி வட்சப் சற்றிங்கில் இருந்து கண்டு பிடிக்கபட்டுள்ளது.

மாணவி தாயாரின் சாதாரண தொலைபேசி இலக்கம் ஒன்றிற்கு லப்டொப் கணனயில் வட்சப்பை இறக்கி மாணவனுடன் நீண்ட காலமாக சற்றிங் செய்து வந்துள்ளதும் கண்டு பிடிக்கபட்டுள்ளது.

அவர்களின் சற்றிங் தொடர்புகள் மூலம் அவர்கள் தவறான புகைப்படங்களை தமக்கிடையே இன்னும் அனுப்பவில்லை என்பதும் விசாரணைகளில் இருந்தும் சற்றிங்குகளிலிருந்தும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முதல் முதல் மாணவியை தனியே சந்திக்க வந்தே மாணவன் மாட்டுப்பட்டுள்ளார். தனது தங்கை மதிய போசணம் சாப்பிட்ட பின்னர் 3 மணிக்கு ரியூசனுக்கு சென்று விடுவாள் என கூறியே மாணவனை மாணவி அழைத்துள்ளதும் தனது தாயார் 4 மணிக்கு பிறகே வீட்டுக்கு வருவார் என்பதையும் தந்தை 7 மணிக்கு வீட்டுக்கு வருவார் என்பதையும் மாணவி சற்றிங்கில் குறிப்பிட்டுள்ளமையும் கண்டு பிடிக்கட்டுள்ளது.

யோகாசனம் கற்கச் சென்ற போதே இருவரும் சந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இரு மகள்களும் பாடசாலை உட்பட எங்கு சென்றாலும் தனியே செல்வதில்லை எனவும் தாய், தந்தையே அவர்களை கொண்டு சென்று இறக்கி வருவதாகவும் அவ்வாறான ஒரு நிலையிலேயே இவ்வாறு குறித்த மாணவி செயற்பட்டுள்ளது தொடர்பாக ஏனைய பெற்றோர்களும் அவதானமாக இருந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இரு தரப்பினரும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் காதலில் ஈடுபட்டவனும் தவறான செயற்பாடுகளில் ஈடுபடுபவன் அல்ல என்பதுடன் உயர்தரத்தில் சிறப்பு தேர்ச்சி பெறக் கூடியவன் எனவும் அறிய முடிகின்றது.

இதுவே போதைப் பொருள் காவாலிகள் போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தால் நிலமையை சிந்தித்துப் பாருங்கள்

பிள்ளைகளின் சகல செயற்பாடுகள் மற்றும் கைத் தொலைபேசிகள், கணனிகளை தொடர்ச்சியாக அவதானித்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வுக்கான பதிவு.

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டுத் தப்பிய லொறி சாரதி..!

0

யாழ் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பின் தொடர்ந்து சென்ற போதே, லொறி சாரதி பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்கு உள்ளாக்கித் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்படும் காட்சி பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது.

லொறியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டமையினால், லொறியை வீதியில் கைவிட்டு சாரதி காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேக நபர் தப்பிச் சென்று கொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் லொறியையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கில் ஆபாச படங்களை காண்பித்து சிறுமி 5 மாதமாக பலரால் வன்புனர்வு..!

0

அம்பாறை நிந்தவூர் பகுதியில் கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்த ஆபாச நடவடிக்கைகளில், 12 வயது சிறுமி பல்வேறு சந்தேக நபர்களால் வற்புறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய 3 தலைமறைவான சந்தேக நபர்களில், இன்று (24) வொலிவேரியன் கிராமத்தில் 36 வயது ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 21-ஆம் தேதி இரவு இந்த நடவடிக்கை இடம்பெற்றது.கைது செய்யப்பட்ட நபர் குடும்பஸ்தர் என்பதும், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளைச் சேர்ந்தவர் என ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக சிறுமியை பாதுகாக்க விட்டு, அவர் வெளி மாவட்ட சிறுவர் காப்பகத்தில் தங்கியுள்ளார். பொலிஸார், சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்ய மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ் சுழிபுரம் பகுதியிருந்து வெளியேறிய இராணுவம்..!

0

யாழ் – சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர்.

நேற்றிரவு (23) குறித்த முகாமை விட்டு வெளியேறிய இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்த கடிதத்தை, 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்துள்ளார்.

அதே போன்று பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் நீண்ட நெடுங்காலமாக முகாமிட்டிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு நீண்ட காலப்பகுதி தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நியமனம் தொடர்பில் சிக்கல்; நாடாளுமன்ற பிரதி செயலாளர் பணியிடை நிறுத்தம்..!

0

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, நேற்று (23.01.2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணியிடை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் விளக்கம் கேட்கப்படாததால், இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய அவசியம் இந்த ஆலோசனைக் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சட்டங்களை மாற்றியமைத்து பல்கலைக் கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் – ரஜீவன் எம்.பி

0

பல்கலைக் கழக சட்டங்களை மாற்றியமைத்து பல்கலைக் கழகங்களுக்குரிய ஆளணிகளை நியமித்து இலங்கை பல்கலைக் கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக திருத்தச்சட்ட விவாதத்தில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

துணைவேந்தர்களை நியமிப்பது பேரவை சிபாரிசின் அடிப்படையில் நிகழ்கின்றது. இதுவரை காலமும் துணைவேந்தர்கள் விரும்புகின்றவர்களை தான் துறைத் தலைவர்களையும் பீடாதிபதிகளையும் நியமிக்கின்றனர்.

நியமனத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினுடைய பலமான கண்காணிப்போடு பேரவை சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

துறைசார் தலைவர்களை வளப்படுத்த வேண்டும். தரம் கொண்டவர்களை நியமிக்க வேண்டும். நாட்டை விட்டு 566 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு விலகியுள்ளனர்.

பல்கலைக் கழகங்களுக்கு நிரப்படவேண்டிய ஆளணி கோரப்பட்ட நிலையில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எனவே பல்கலைக் கழக சட்டங்களை மாற்றியமைத்து பல்கலைக் கழகங்களுக்குரிய ஆளணிகளை நியமித்து இலங்கை பல்கலைக் கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்ற தொகுதியில் விசேட கலந்துரையாடல்..!

0

கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று (23.01.2026) பாராளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் K.D.லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களால் ஊடகங்களுக்கு விசேட செய்திக் குறிப்பொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று (23.01.2026) பாராளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் K.D.லால்காந்த அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும் துறைசார் அமைச்சின் பிரதி அமைச்சர்கள், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மகாவலி-எல் வலய விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான ஒருகூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் ஒருசில தினங்களுக்கு முன் பிறிதொரு நிகழ்வில் தெரிவித்த அமைச்சர் K.D.லால்காந்த அவர்கள் அதற்கான அழைப்பு அனுப்பப்படும் என தெரிவித்தார்.

ஆனால் இன்றைய கூட்டம் தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படாத நிலையில் நானும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டோம்.

அமைச்சர் லால்காந்த அவர்கள் இதன் போது எமது கருத்தை அறிய ஆவலாக உள்ளதாக தெரிவித்தார்.

மகாவலி-எல் வலய குடியேற்றம் தொடர்பான விடயங்களிலும் அங்கு இப்போது நடைபெறும் கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலும் கசப்பான கடந்தகால அனுபவங்களும் கரிசனையும் எமக்கு உள்ளது என்பதை அச்சபைக்கு தெரியப்படுத்தினோம்.

2011ம் ஆண்டு கிவுல் ஓயா திட்டம் தயாரித்ததிலிருந்து இன்று வரை வெளிப் படைத்தன்மை இல்லாமல் மிக இரகசியமாகவே அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுவதாக சபைக்கு சுட்டிக்காட்டினோம்.

இவ்வாறே செட்டிகுளத்தில் நடைபெறும் கீழ்மல்வத்து ஓயா நீர்ப்பாசன திட்டம் இரகசியமாக சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுக்கு தெரியாமல் அத்திட்டத்திற்கான காரியாலயத்தை இரகசியமாக அனுராதபுரத்தில் அமைத்து வேலைகளை முன்னெடுத்தமை தொடர்பிலும் தெரியப்படுத்தினோம்.

இறுதியாக நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிவுல் ஓயா திட்டம் தொடர்பான திட்டமுன்மொழிவை எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆராய்ந்து பொருத்தமான அனுமதியை பெற வேண்டும் என்று நான் முன் மொழிந்திருந்தேன். அவ்வாறு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சருக்கு சுட்டிக்காட்டினேன்.

மகாவலி-எல் வலய அபிவிருத்தி என்ற பெயரில் அங்கிருந்த பூர்வீக குடிமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு 1983ல் குடியேற்றம் செய்யப்பட்டாலும் இதுவரை மகாவலி நீர் அங்கு கொண்டு வரப்படவில்லை, கிவுல் ஓயா திட்ட முன்மொழிவில் மகாவலி நீரை கொண்டு வரும் சாத்தியக்கூறுகள் இல்லாததாலேயே மாற்றீடாக இத்திட்டம் கொண்டு வரப்படுவதாக இருப்பதையும் மேற்படி திட்ட நோக்கத்தில் புதிதாக அபிவிருத்தி செய்யும் இடத்தில் புதிய குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டதையும் தெளிவுபடுத்துமாறு கோரினோம்.

எமது கருத்தை கேட்டறிந்த அமைச்சர் உட்பட்ட குழுவினர் பின்வரும் உறுதி மொழிகளை எமக்கு வழங்கினர்.

1. திட்டப் பிரதேசத்துடன் தொடர்புடைய அனைத்து மக்கள் பிரதிநிகளுடனும் பிரதேச மக்களுடனும் மாசி மாத முற்பகுதியில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நடைபெறும்.

2. புதிய குடியேற்றவாசிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட மாட்டர்கள்.

சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாது திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்தும் தறுவாயில் எமது தலையீட்டையடுத்து தெளிவுபடுத்தல் செய்ய ஆயத்தமாகும் செயர்பாடு ஆபத்தானது, கண்டிக்கப்பட வேண்டியது.

மேற்படி திட்டத்தால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் செயற்பாட்டில் அனைவரும் இணைந்து செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அனைவரையும் இச் செயற்பாட்டில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!