Sunday, January 25, 2026
Huis Blog Bladsy 110

மன்னாரில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு..!

0

மன்னாரில் பெற்றோரால் கல்விக்காக விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (20.04.2025) இடம் பெற்றுள்ளதாக முருங்கன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக்கடவையை சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக் கடவையை சேர்ந்த இம்மாணவியை பெற்றோர் முருங்கனில் உயர் கலவிக்காக கன்னியர் குருமட விடுதியில் நேற்றையதினம் (20) இணைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவி நேற்று இரவு தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறை விசாரனையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, உயிரிழந்த மாணவியின் உடலம் மன்னார் மாவட்ட வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

பிள்ளையானின் அலுவலகத்தில் ஆயுதங்கள்; ஆயுதங்களுடன் இருவர் கைது..!

0

சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் பல குற்றச் செயல்கள், கொலைகள், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர் எனக் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் உள்ளார்.

இந்நிலையில், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கிடைத்த தகவல்களின் படி, அரச சாட்சியாக மாறியுள்ள குகன் என்பவர், பிள்ளையானிடம் பெருந் தொகையான ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வழங்கியுள்ளார்.

அதன்படி, இன்று பிள்ளையான் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது பெருந் தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் போராட்டத்தின் வரலாற்றில் அன்னை பூபதி ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார்..!

0

இந்திய அமைதி காக்கும் படையினரின் (IPKF) அட்டூழியங்களுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தமிழ்ப் பெண் அன்னை பூபதி இறந்து இன்றுடன் 37 ஆண்டுகள் நிறைவடைகிறது.

மட்டு அம்பாறை தாய்மார்கள் முன்னணியின் உறுப்பினராக, மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை, IPKF செய்த அநீதிகள் மற்றும் அட்டூழியங்களை எதிர்த்து மார்ச் 19, 1988 அன்று சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அவரது உண்ணாவிரதம் ஏப்ரல் 19 அன்று அவரது மரணத்துடன் முடிந்தது.

“அன்னை பூபதி நமது போராட்டத்தின் பொற்கால வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார்,” என்று தேசியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு தாயாகவும், ஒரு குடும்பத் தலைவராகவும், ஒரு பெண்ணாகவும் தனது வாழ்க்கையைத் துறந்து தனது மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்தார்.

இந்திய இராணுவத்திற்கு எதிரான அவரது தார்மீகப் போர் இந்தியாவிற்கு ஒரு அவமானமாக இருந்தது. அவர் ஒரு மனிதராக இறக்கவில்லை. அவரது தியாகம் தமிழர்களின் தாய்மையின் எழுச்சியைக் குறிக்கிறது.”

அன்னை பூபதியின் 28 வயது மகன் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான், மற்றொரு மகன் சிறப்புப் படையினரால் தற்செயலாக சுட்டுக் கொல்லப்பட்டான். சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட மற்றொரு மகன் பூசா இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு உள்ளானான்.

அவரது தியாகம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது.

அன்னை பூபதி ஒரு ஆயுதமேந்திய போராளி அல்ல, இருப்பினும், தனது சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்த முதல் தமிழ்ப் பெண் என்ற முக்கியத்துவம் அவருக்கு உண்டு.

தமிழ் மக்களின் நவீன அரசியலில், அவரது சாகும் வரையிலும், அதற்கு முன்பும் இருந்ததைப் போலவே, சுய தியாகம் செய்த ஒரு பெண்ணை இன்னும் காட்ட முடியவில்லை.

பூபதிக்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகளாக, தாய்மார்கள் தமிழ் அரசியலில் முக்கிய செயல்பாட்டாளர்களாக இருந்து வருகின்றனர்.

கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வரும் அனைத்து போராட்டங்களும், காணாமல் போன தங்கள் உறவினர்களைத் தேடும் தமிழ்த் தாய்மார்களின் கண்ணீரில் நனைந்துள்ளன.

பிள்ளையானின் மிக நெருக்கமான சாரதி சிஐடியினரால் அதிரடி கைது..!

0

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சாரதியாகச் செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையானின் சகா ஒருவர் சரணடைய ஆயத்தம் – அமைச்சர் ஆனந்த பரபரப்புத் தகவல்

0

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர் , தனது சுயவிருப்பின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால , கம்மன்பில – பிள்ளையான் சந்திப்பின் போது பிள்ளையான அழவில்லை என்றும் அந்த சந்திப்பின் போது அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தான் இதனை வினவியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணையை குழப்பும் வகையில் கம்மன்பில செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டிய அமைச்ச ஆனந்த, பிள்ளையானுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர் விசாரணைக்கு சுயமாகவே வருகிறார் என்றால் அவர்கள் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்காக அர்ப்பணித்து செயற்படுவது ரௌடித்தனம் எனில் நானும் ரௌடி தான்..!

0

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் நேன்று (17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபையின் வேட்பாளர் சு.கபிலன் மற்றும் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலையென மாறுவது உறுதியாகிறது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பி எண்ணி வருகின்றனர்.

அதேபோல படுகொலைகளில் ஈடுபட்டவர்கள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயல்படும்.

நாம் இவ்வாறு செயற்படும்போது தேசிய மக்கள் சக்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக கொக்கரிக்கின்றனர். எமக்கு எவருடனும் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது.

குற்றமிழைத்தவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது. சட்டத்தை நம் கையில் எடுக்க மாட்டோம். நீதிமன்றம் ஊடாகவே அதற்குரிய பணி இடம்பெறும்.

வடக்கிலும் மண் கடத்தல் காரர்கள் உள்ளனர். ஆட்களை கடத்தியவர்கள் உள்ளனர். ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

மக்களின் நிம்மதியை சீர்குலைத்தவர்கள், தற்போது நடுங்க ஆரம்பித்துள்ளனர். சந்திரசேகரன் ரௌடி எனவும் கூறத் தொடங்கியுள்ளனர்.

என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி. மக்களுக்காக செயற்படுகின்ற போது, மக்களுக்காக குரல் கொடுக்கின்றபோது, ​​மக்களுக்காக எம்மை அர்ப்பணிக்கும்போது அதை பார்த்து ரௌடித்தனம் என்கிறார்கள்.

இதுதான் ரௌடித்தனம் எனில் அதனை ஏற்றுக் கொள்ள நான் தயார். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவின் பைல்களை தூக்கி திரிந்தவர்கள்தான் இப்படி சொல்கிறார்கள்.

புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட போது அதனை வரவேற்றவர்கள், இன்றுதான் புலிகள் அமைப்பின் அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். புலிகள் காலத்தில் துரோகி முத்திரை குத்தப்பட்டவர்கள் இவர்கள்.’ -என்றார்

ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு நிறுத்தம்..!

0

அதிபர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை நிறுத்தி வைக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,

சம்பள உயர்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஒரு அதிகாரி, தரம் II க்கு பதவி உயர்வு பெற திட்டமிடப்பட்ட திகதிக்குள் உரிய ஆங்கில மொழிப் புலமையைப் பெறத் தவறினால், பதவி உயர்வுக்கு திட்டமிடப்பட்ட திகதியிலிருந்து தாமதக் காலத்திற்குச் சமமான காலம் பதவி உயர்வு தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

பொது சேவை ஆணைக்குழு சுற்றறிக்கை எண் 08/2020 இன் படி, சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அல்லது தகுதிகளைப் பூர்த்தி செய்த அதிபர்களுக்கு இந்த முடிவு பொருந்தாது என்று அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவை விதிமுறைகளின்படி, அனைத்து அதிபர்களும் அரச மொழியான ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாய நிபந்தனையாகும்.

யாழில் காதலன் நீரில் மூழ்கி பலி; காதலி செய்த விபரீத செயல்..!

0

தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

குளத்தில் தாமரைப்பூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. இளைஞன் குளத்தில் தாமரைப்பூ பறித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானை சந்திக்க அனுமதி கோரிய ரணில்; கைது செய்யப்படுவாரா ரணில்?..!

0

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வுத் துறையிடம் கோரியதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை அழைத்து, உரிய வாய்ப்பை கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காவலில் உள்ள ஒரு சந்தேக நபருடன் தொலைபேசியில் பேசுவது சட்ட விரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இருப்பினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் வழக்கறிஞராகச் செயல்படும் திரு. உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் துறையிடம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புவதாகக் கூறி கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, திரு. உதய கம்மன்பிலவுக்கு சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறைக்குச் சென்று பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முன்னிலையிலும் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

விளையாட்டுக்கள் பொழுது போக்குக்கு மாத்திரம் உரியவை அல்ல – வட மாகாண ஆளுநர்

0

இன்றைய பிள்ளைகள் பாடசாலை முடிந்தவுடன் ஒன்றில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர். இல்லையேல் அலைபேசியுடன் வீட்டில் மூழ்கிக் கிடக்கின்றனர். விளையாட்டு மைதானத்தை எட்டிப்பார்ப்பது அருகி வருகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனை வெளியிட்டார்.

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொதுமக்களும் இணைந்து நடத்தும் புதுவருட விளையாட்டு விழா – 2025, இரண்டாம் நாள் நிகழ்வு வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக வடபுல மைதானத்தில் இன்று செவ்வாய்க் கிழமை மாலை (15.04.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டனர். மேடை நிகழ்வுகள் அதனைத் தொடர்ந்து நடைபெற்றன.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில்,

விளையாட்டுக்கள் பொழுது போக்குக்கு மாத்திரம் உரியவை அல்ல. அவை எங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், தலைமைத்துவத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் பெரிதும் உதவுகின்றன. சிறந்த விளையாட்டு வீரர்களிடம் மற்றையவர்களை மதிக்கும் பண்புகளையும் காணலாம்.

ஆனால் துரதிஷ்டவசமாக எமது பிரதேசங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அருகி வருகின்றது. பல ஊர்களில் இருந்த விளையாட்டுக் கழகங்கள் இன்று செயற்றிறன் இழந்திருக்கின்றன. ஆனால் உங்கள் விளையாட்டுக் கழகத்தில் இரவு நேரத்திலும் விளையாட்டுப் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய சமூகத்தின் மத்தியில் சமூகப்பிறழ்வு அதிகரித்துச் செல்கின்றமைக்கு, விளையாட்டுக்களில் பங்கேற்காமை பிரதான காரணமாகும். இந்தப் பிரதேசத்து இளையோர் அதிகளவில் விளையாட்டுக்களில் கவனம் செலுத்துவதால் சமூகப் பிறழ்வுகளில் ஈடுபட்டதாக எந்தவொரு முறைப்பாடும் இல்லை என உங்கள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சொல்லியிருந்தார். உண்மையில் விளையாட்டுக்களிலும், கலைச் செயற்பாடுகளிலும் இளையோர் நாட்டம் செலுத்தினால் சமூகப்பிறழ்வுகள் எவ்வளவோ குறைவடையும்.

உங்களது விளையாட்டுக் கழகம் போன்று ஊர்கள்தோறும் விளையாட்டுக்கழகங்கள் உருவாகி இளையோரை அவர்கள் ஈர்த்தால் எதிர்காலத்திலாவது சிறந்த நிலையை அடைய முடியும், என நம்புகின்றேன் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

விளையாட்டுக் கழகத் தலைவர் கு.பாலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் கலந்து கொண்டார். விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஆளுநர் பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

 

error: Content is protected !!