Sunday, January 25, 2026
Huis Blog Bladsy 4

பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல்; அரசு எடுத்துள்ள நடவடிக்கை..!

0

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மகளிர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, இந்த யோசனையை “திறமையான மற்றும் மிகவும் அவசியமான ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தெற்காசிய நாடுகளுடன் (உதாரணமாக பாகிஸ்தான்) ஒப்பிடுகையில், இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களை அதிகளவில் வேலைவாய்ப்புச் சந்தையில் இணைத்துக் கொள்ள முறையான திட்டங்கள் நாட்டுக்குத் தேவை என்றும், இந்த முன்மொழிவு மிகவும் முற்போக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அமைச்சரவை மட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

இந்த யோசனையை ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சமிந்ரனி கிரியெல்ல முன்வைத்தார்.

பெண்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பதன் மூலம், நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெண்கள் குடும்பப் பொறுப்புகள் காரணமாக வேலைக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைப்பதற்கும், நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் இது ஒரு தீர்வாக அமையும் என்று அவர் வாதிட்டார்.

டித்வா பேருந்து அனர்த்தம்; பத்மநிகேதனை கொன்றதாக சாரதி மீது கொலைக் குற்றச்சாட்டு..!

0

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளிப் பாதிப்புகளின் போது, 68 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று பெருக்கெடுத்து ஓடிய கலா ஓயா பாலத்தைக் கடக்க முயன்றது.

பொலிஸார் மற்றும் பொதுமக்களின் கடும் எச்சரிக்கையையும் மீறி சாரதி எடுத்த இந்தத் தீர்மானத்தினால் ஏற்பட்ட விபத்தில் இரு பயணிகள் உயிரிழந்தனர்.

பொதுவாக வீதி விபத்துக்களின் போது சுமத்தப்படும் சாதாரண குற்றச் சாட்டுகளுக்குப் பதிலாக, இச்சம்பவத்தில் சாரதிக்கு எதிராகப் பின்வரும் கடுமையான பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்:
பிரிவு 296: கொலைக் குற்றச்சாட்டு (Murder)
பிரிவு 300: கொலை முயற்சி (Attempt to Murder)

சாரதி வேண்டுமென்றே பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பாலத்தைக் கடக்க முயன்றதால், இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டுகள் அவசியமானவை என உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவத்திலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிபோது உயிரிழந்திருந்தார்.

நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாரதி தனுஷ்க குமாரசிங்கவை எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், “சாரதிக்கு எவரையும் கொல்லும் நோக்கம் இருக்கவில்லை” என வாதிட்டு பிணை கோரினர்.

எனினும், குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன் பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

யாழில் காதலனின் நிர்வாண படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பெண் கைது..!

0

யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது நிர்வாண புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டதாகவும், அது அவரது முன்னாள் காதலியால் செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, வடக்கு மாகாண குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், முன்னாள் காதலியின் செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் முறைப்பாட்டாளருடன் சுமார் 15 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

தனது காதலனை பிரிந்ததால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், வேதனையடைந்ததாகவும் அதனால் பழிவாங்கும் நோக்கில் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

திருமலை சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம்; பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் சிறையில் அடைப்பு..!

0

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கானது நேற்றைய தினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார்.

குறித்த வழக்கானது நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்ட விரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்ட போது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் நேற்றைய தினம் (14) நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரிணியின் பிரதமர் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசம்???

0

கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித் துறையில் செயல்படும் தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்புகளும் அவருக்கு எதிராக தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலைமையை பயன்படுத்தி, ஜே.வி.பி. கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், பாராளுமன்ற சபைத் முதல்வரான பிமல் ரத்நாயக்கவை புதிய பிரதமராக நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

பிமல் ரத்நாயக்க அண்மையில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்ததுடன், அதன் பின்னர் பாகிஸ்தானுக்கும் விஜயம் செய்துவிட்டு இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

எனினும், தரம் ஆறுக்கான கல்வி சீர்த்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பிரதமர் பதவியில் ஹரிணி அமரசூரிய தொடர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊழியர்களின் பண்டிகை முற்பண தொகை அதிகரிப்பு; சுற்றறிக்கை வெளியீடு..!

0

அரச ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய தினம் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த முற்பணத் தொகையை 15,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

அரச அதிகாரிகளுக்கு பண்டிகைக் கால முற்பணம் வழங்குவது தொடர்பான தாபனக் கோவையின் விதிகளுக்கமைய, தைப் பொங்கல், ரமழான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்காகவும், புனித யாத்திரைகளுக்காகவும் தற்போது 10,000 ரூபாய் முற்பணமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

இந்த முற்பணத் தொகையை வட்டியின்றி0 8 மாதத் தவணைகளில் அல்லது தேவைப்படின் அதற்கு முன்னதாகவோ மீளச் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பண்டிகைக் கால முற்பணத் தொகையை 15,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப் பட்டிருந்ததுடன், அதற்கான சுற்றறிக்கையை தற்போது அமைச்சு வெளியிட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு மிரட்டல்..!

0

பதுளை மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் முன்னர் பதிவான மிரட்டல்களைப் போலவே, சமீபத்திய மிரட்டலும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதுளை மாவட்ட செயலகத்தில் உள்ள ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், வளாகத்தை ஆய்வு செய்ய சிறப்புப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இதுவரை, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மோசடிகளைக் கட்டுப்படுத்த அரச வாகனங்களுக்கு எரிபொருள் டிஜிட்டல் அட்டை..!

0

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் டிஜிட்டல் அட்டை முறையைப் பயன்படுத்துவதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் எரிபொருள் தேவைக்கேற்ப இணையவழி வங்கி முறைமை ஊடாக அதற்கான பணத்தை ஈடுசெய்வதற்கும், தனிநபர் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் உயர் வெளிப்படைத் தன்மையுடனும் வினைத்திறனுடனும் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை வங்கியும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து வாகனங்களுக்கான டிஜிட்டல் அட்டை மூலம் எரிபொருள் விநியோகம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

அதற்கமைய, முதற்கட்டமாக ஒரு முன்னோடித் திட்டமாக ஜனாதிபதி செயலகத்தின் வாகனத் தொகுதிக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக இந்த முறையை அமுல்படுத்தவும், அதன் வெற்றியின் அடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இம்முறையை விரிவுபடுத்துவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதேவேளை வடக்கின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்குள் டிஜிட்டல் அட்டை முறை மிக விரைவாக கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.

யாழில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு; உரிமையாளரே தீ வைத்தாரா எனச் சந்தேகம்..!

0

யாழ், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும் கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததாக முதற் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதே வேளை ஏதாவது காப்பறுதி பெறுவதற்காக அல்லது தனக்கு சிங்கள மக்களிடம் அனுதாபம் உள்ளிட்ட அரசியல் நலனை தேடுவதற்காகவும், பண உதவி பெறுவதற்காகவும் தனது அலுவலகத்தை தனது ஆட்களைக் கொண்டே எரித்து நாடகமாடியிருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் பாடசாலை உபகரணக் கொள்வனவிற்கு இவ்வாண்டும் 6000 ரூபா..!

0

பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கான கொடுப்பனவு வழங்கும் வேலைத் திட்டத்தை இவ்வாண்டிலும் நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அஸ்வெசும உரித்துள்ள குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு மாணவன் அல்லது மாணவிக்கு 6,000 ரூபா கொடுப்பனவை நலன்புரிகள் நன்மைகள் சபை மூலமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அஸ்வெசும வேலைத் திட்டத்தில் உள்வாங்கப்படாததும், ஆனாலும் கொடுப்பனவு கிடைக்க வேண்டியவர்கள், நாடளாவிய ரீதியில் 300 பிள்ளைகளுக்கும் குறைவாகவுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் துறவுப் பெண்கள் ஆச்சிரமங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் மற்றும் துறவு மாணவர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்காக ஒருவருக்கு 6000 ரூபா கொடுப்பனவை கல்வி. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடாக செலுத்துவதற்கும், 2025 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை இவ்வாண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

error: Content is protected !!