தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கும் நெடும் பயணத்தில் ஈடுபடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கங்களில் இந்த நீண்ட நெடும் பயணத்தில் சிறு சிறு பேச்சுவார்த்தைகளுக்கான வழிகள் அல்லது ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன்னமும் அது குறித்து சிந்திக்கவில்லை என ஸ்ரீதரன் கூறினார்.
சூரியன் வானொலியில் ஒலிபரப்பாகும் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளையும் கருத்துகளையும் ஸ்ரீதரன் வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி தெரிவாகி ஒருவருடம் கடந்துள்ளதாகவும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒருவருடம் பூர்த்தியாகவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர அரசியல் பிரச்சினை உள்ளது என்றும் அந்த நிரந்தரமான அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய அரசாங்கத்துக்கு இருக்கின்றதா என்று தமக்குத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
காலம் இழுத்தடிக்கப்படுவதே தவிர அரசாங்கம் இன்னமும் ஊக்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பது தான் தம்முடைய நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.









