Sunday, July 6, 2025
Huis Blog Bladsy 4

செம்மணியில் நேற்றும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள் மீட்பு..!

0

செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

அவற்றில் ஏற்கனவே 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் ஒன்றுடன் ஒன்றின் பின்னி பிணைந்து குழப்பமான முறையில் காணப்படுவதால் அதனை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்பு கூடுகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வரையில் 24 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவற்றையும் அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால், புதிதாக எவையும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புதைகுழி ஒன்றினுள் அடையாளம் காணப்பட்ட நீல நிற பை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதனை அகழ்ந்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செம்மணி புதைகுழியில் இடம்பெறும் சூழ்ச்சி; புத்தகப்பையை அகற்றுமாறு வந்த உத்தரவு..!

0

செம்மணி புதைகுழியில் நேற்றைய தினம் புத்தக பையொன்று கண்டுபிடிக்கப்பட்டவேளையில் அதனை அங்கிருந்து அகற்றுமாறு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக எங்களுக்கு உறுதிப் படுத்தப்படாத சில தகவல்கள் கிடைத்தன.

ஆனால் அங்கிருந்த ஊடக நண்பர் ஒருவர் அதனை உடனடியாக புகைப்படம் எடுத்ததன் காரணத்தினால் அது வெளிவந்திருக்கின்றது. இந்த விடயங்களை மூடிமறைக்க அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் நேற்றில் இருந்து சில விடயங்கள் நடைபெற்றுவருகின்றது. இதனை தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய தேவையிருக்கின்றது.

செம்மணியில் தொடர்ந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 33 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மனித எச்சங்கள் அதிகரித்துச் செல்லுமானால் சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் அவற்றினை முன்னெடுப்பதில் இருந்து தவறி வருகின்றது. இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

33 பேரின் எச்சங்கள் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அதனை பாதுகாப்பதற்கு கூடாரங்களோ அல்லது பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. புதைகுழியில் கண்டுபிடிக்கும் அடையாளங்களை பாதுகாப்பதற்கான கூடாரங்களை அமைத்தால் மாத்திரமே அவற்றினை பாதுகாக்க முடியும்.

மழை பெய்யுமானால் அவற்றிற்கு பாதிப்புகள் ஏற்படும். டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்படும் போது சில கஷ்டங்கள் ஏற்படும். எனவே, இவை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

புதைகுழிகளின் வலி எமக்கு புரியும் நீதியான விசாரணை நடத்துவது உறுதி – பிமல்

0

புதைகுழிகளுடன் நாம் விளையாடமாட்டோம். அந்த வலி, வேதனை எமக்கு நன்கு புரியும். நீதிமன்ற நட வடிக்கை ஊடாக நீதி நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும்என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“வடக்கில் செம்மணி, மண்டைத்தீவு, கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வடக்கிலும், தெற்கிலும் இவ்வாறு நூற்றுக்கணக்கான புதைகுழிகள் இருக்கக்கூடும்.

இவை தொடர்பில் நீதியை பெற்றுக் கொடுப்பதற்கே எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. அந்த வகையில் மனித புதைகுழிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்.”

மனித எலும்புக்கூடுகளை அடையாளம் கண்டு, ஆய்வுக்காக – உரிய வசதிகளுள்ள வெளிநாடொன்றுக்கு அவற்றை அனுப்ப வேண்டும். இதற்கு காலமெடுக்கும். மாத்தளை மனித புதைகுழியில் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை அனுப்பும் போது, எலும்புக்கூடுகள் மாற்றப்பட்டுள்ளன என்ற பலத்த சந்தேகம் எமக்கு உள்ளது.

எனவே, எமக்கு ஆய்வு செய்யக்கூடிய ஆய்வகமொன்றை இலங்கையில் நிறுவுவதற்கு உதவுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மனித புதைகுழிகள் தொடர்பில் நிச்சயம் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும். எமது தோழர்கள் காணாமல்ஆக்கப்பட்டுள்ளனர்.

எனவே, புதைகுழிகளுடன் நாம் விளையாடமாட்டோம். அந்த வலி, வேதனை எமக்கு நன்கு புரியும். நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நீதி நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும். செம்மணி அகழ்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; சலுகை வட்டி விகிதத்தில் புதிய கடன் திட்டம்..!

0

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்கும் நோக்கில், 2025 சிறுபோக நெல் அறுவடையை வாங்குவதற்காக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு சலுகை வட்டி விகித கடன் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த கடன் திட்டத்தின் இலக்கு குழுக்கள் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கங்கள் ஆவார்கள்.

இதன்போது தினசரி அதிகபட்சமாக சுமார் 25 மெட்ரிக் டன் நெல் கதிரடிக்கும் திறன் கொண்டுள்ள ஆலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தக் கடனைப் பெறுவதற்கு, அனைத்து கடன் விண்ணப்பதாரர்களும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் வணிகப் பதிவுச் சான்றிதழையும், நெல் சந்தைப்படுத்தல் வாரியத்தால் வழங்கப்பட்ட உரிமத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அவர்கள் ஆண்டுக்கு 07% வட்டி விகிதத்தில் ரூ. 50 மில்லியன் வரை கடனைப் பெறலாம், மேலும் தொடர்புடைய கடன் தொகையை 180 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தக் கடன் திட்டத்திற்கான பங்கேற்கும் நிதி நிறுவனங்களாக பின்வரும் வங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

• Bank of Ceylon (BOC)

• People’s Bank

• Regional Development Bank (RDB)

• Hatton National Bank (HNB)

• Seylan Bank

• Sampath Bank

• Commercial Bank

• DFCC Bank

• National Development Bank (NDB)

• Nations Trust Bank

• SANASA Development Bank

• Amana Bank

• Cargills Bank

• Pan Asia Bank

இந்த கடன் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் வெளியிடப்படும் மொத்த கடன் தொகை சுமார் ரூ. 6,500 மில்லியன் ஆகும், மேலும் விவசாயிகளின் நெல் அறுவடைக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காக விவசாயத் துறையால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையில் நெல் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 30, 2024 அன்று அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவின்படி தொடங்கப்படும் இந்தக் கடன் திட்டம், ஜூலை 01, 2025 முதல் நவம்பர் 15, 2025 வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே பாடசாலை மாணவிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த பொறியியலாளர் கைது..!

0

ஒரே பாடசாலையில் படிக்கும் மூன்று மாணவிகளை தனது ஆடம்பர வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த மென்பொருள் பொறியாளரை கைது செய்துள்ளதாக களுத்துறை -மொரகஹஹேன பொலிஸார் கூறுகின்றனர்.

கைதான சந்தேக நபர் 30 வயதான திருமணமானவர் என பொலிஸார் கூறியுள்ளனர். 16 வயது சிறுமியை பாடசாலைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அந்த மாணவிக்கு உதவுவதாகக் கூறி தனது காரில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவளுடன் நட்பு கொண்டுள்ளார்.

அதன் பின்னர், மதியம் யாரும் இல்லாதபோது மூன்று முறை தனது வீட்டிற்கு மதியவேளையில் அழைத்துச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம், ஒரு வருடத்திற்கு முன்பு இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனையடுத்து சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, இந்த மாணவி தான் படிக்கும் அதே பாடசாலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை அழைத்து, தன்னிடமிருந்த சந்தேகநபரின் புகைப்படத்தைப் பார்க்கச் சொல்லியுள்ளார்.

அதன்படி, 16 வயது சிறுமி, 13 வயது சிறுமியின் தாயாரின் அலைபேசிக்கு வாட்ஸ்அப் மூலம் சந்தேக நபரின் புகைப்படத்தை அனுப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை (27) ஒருவரையொருவர் சந்திக்க முடிவு செய்தனர். சந்தேக நபருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்த 13 வயது சிறுமி, இது குறித்து தனது தோழியிடம் தெரிவித்து, அவளுடன் தனது காதலனைச் சந்திக்கச் செல்ல ஒப்புக் கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அங்கு, சந்தேக நபர் இரண்டு சிறுமிகளையும் தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தமை பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாலியல் வன்கொடுமைக்கு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகளை கடத்துவதற்காக வீட்டிற்கு அழைத்துச் செல்ல பயன்படுத்திய சொகுசு காரையும், சந்தேக நபர் பயன்படுத்திய ஸ்மார்ட்போனையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகிந்த குடும்பத்தின் மீது நேரடியாக கை வைக்க அரசுக்கு அச்சம்; மனோ எம்.பி கிண்டல்..!

0

மகிந்த குடும்பம் மீது நேரடியாக வைவைக்க அநுர அரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தனது மனைவிய கைது செய்ய வேண்டாம் என்று அரசுக்கு சொல்லுங்கன்னு மஹிந்த, கண்டி பெளத்த மகா நாயக்கர்ட உதவி கேட்கல்ல எனவும், இந்த செய்தி அரசு தரப்பால் பரப்பபடுது எனவும் நாமல் கூறுகிறார்.

எது எப்படியோ, ஷிரந்தி ராஜபக்சவை கைது பண்ணி ஸ்கோர் பண்ண அரசு தரப்பு விரும்பினாலும், மகிந்த குடும்பத்தின் மீது நேரடியா கை வைக்க அரசுக்கு, அச்சம் இருப்பது தெரியுது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர் அனுமதி; இன்று வெளியாகும் புதிய சுற்றறிக்கை..!

0

தற்போதுள்ள சுற்றறிக்கைகளுக்குப் பதிலாக அரச பாடசாலைகளில் தரம் 1 மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள் வெளியிடப்படும் என்று கல்வித் துணை அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

அதன்படி, தரம் 1 இல் மாணவர்களை சேர்க்க திருத்தப்பட்ட சுற்றறிக்கை இன்று (30) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பில் இருக்க வேண்டிய அதிகபட்ச மாணவர் எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களை சேர்க்க சட்டபூர்வ ஏற்பாடு இல்லை என்றாலும், வெற்றிடங்கள் இல்லாமல் 2024 இல் 555 மாணவர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான கோரிக்கைகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் செய்யப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது.

புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கை , ஒரு வகுப்பில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச மாணவர் எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களை சேர்க்கும் வாய்ப்பை நீக்கும், அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான முறையின் கீழ் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான அளவுகோல்களை உள்ளடக்கிய ஒரு முறையை அறிமுகப்படுத்தும் மற்றும் சட்டவிரோத மற்றும் முறையற்ற முறைகள் மூலம் பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதை முடிவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்து குவியும் முறைப்பாடுகள்..!

0

இந்த ஆண்டின் கடந்த 05 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு கிடைத்த புகார்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியுள்ளது.

ஜனவரி 1, 2025 முதல் மே 31, 2025 வரை 2,138 புகார்கள் வந்துள்ளதாக ஆணையம் குறிப்பிடுகிறது.

2024 ஆம் ஆண்டு நிலுவையில் உள்ள புகார்கள் உட்பட, ஆணையத்திடம் தற்போது மொத்த புகார்களின் எண்ணிக்கை 2,221 என்று கூறப்படுகிறது.

விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை
இவற்றில், 224 புகார்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் 524 புகார்கள் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், சட்டத்திற்குப் பொருத்தமற்றதாலும் விசாரிக்கப்படாமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்தின் கடந்த 05 மாதங்களாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட முன்னேற்ற அறிக்கை, 282 புகார்கள் விசாரணைக்காக வேறு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது.

சம்பந்தப்பட்ட காலகட்டத்தில், இலஞ்ச ஊழல் ஆணையம் மொத்தம் 44 சோதனைகளை நடத்தியுள்ளது, மேலும் 25 வெற்றிகரமான சோதனைகளில் 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 05 மாதங்களில், இலஞ்ச ஊழல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் 42 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது, மேலும் முன்னாள் அமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர், முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் 11 காவல்துறை அதிகாரிகள் உட்பட 45 குற்றவாளிகளுக்கு எதிராக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இலஞ்ச ஊழல் ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர், சதோசவின் முன்னாள் தலைவர் மற்றும் மாகாண முதலமைச்சர் உட்பட 19 பேர் சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட 272 வழக்குகள் தற்போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் தொடர்புடைய முன்னேற்ற அறிக்கை கூறுகிறது.

தமிழக மீனவர்கள் விடுதலை; ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

0

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 08 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் IND-TN-10-MM-773 பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திர மயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும், நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.

வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளனர்.

அவர்கள் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!

0

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 இந்திய மீனவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்படரப்பில் இன்று(29) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சம்பத் புத்திக தெரிவித்தார்.

மீனவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

error: Content is protected !!