Sunday, April 26, 2026
Huisதாயகம்மாறாவிலுப்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ரவிகரன் எம்.பி நிதி ஒதுக்கீடு..!

மாறாவிலுப்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ரவிகரன் எம்.பி நிதி ஒதுக்கீடு..!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள மாறாவிலுப்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறைகளுக்கான மின்னிணைப்புத் திருத்தத்திற்கென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 2026ஆம் ஆண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 200,000 ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

பாடசாலைச் சமூகத்தினரின் கோரிக்கைக்கமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினரால் குறித்த பாடசாலைக்கு இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் கடந்த 23.04.2026அன்று குறித்த பாடசாலைக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாடசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

அந்தவகையில் 50மாணவர்கள் கல்விகற்கும் குறித்த பாடசாலைக்கு 18 ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆசிரிய ஆளணிகள் காணப்படுகின்ற போதும், தற்போது 11ஆசிரியர்களே அங்கு பணியாற்றுவதாக இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதற்கமைய கணிதப் பாடத்திற்குரிய ஆசிரியர் இல்லாத நிலை காணப்படுவதுடன், ஆரம்பப் பிரிவிற்குரிய இரண்டு ஆசிரியர்களும் இல்லாத நிலை காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அதேவேளை இப்பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூடம் இல்லாத நிலையில் ஆரம்பப் பிரிவிற்குரிய ஒரு வகுப்பறைக் கட்டடத்தை விஞ்ஞான ஆய்வுகூடமாக பயன்படுத்தி வருவதாக சுட்டிக் காட்டியதுடன், விஞ்ஞான ஆய்வுகூட வசதியை ஏற்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரப்பட்டது.

அத்தோடு குறித்த பாடசாலையில் தளபாடப்பற்றாக்குறை, கழிப்பறைத் திருத்தம் போன்ற குறைபாடுகளும் காணப்படுவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் குறித்த குறைபாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்து பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், நேரடியாகவும் பார்வையிட்டார்.

மேலும் கோரிக்கைகளை தம்மிடம் எழுத்துமூலமாக கையளிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமென இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!