Tuesday, November 18, 2025
Huis Blog

பெண் ஊழியர்களின் இரவு நேர வேலை தொடர்பில் கிடைத்த அனுமதி..!

0

கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் (ஊழியர் மற்றும் பணிக்கொடை முறைப்படுத்தல்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் இல. 03 இனைத் திருத்தம் செய்வதற்காக 2025.07.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் மூலம் தங்குமிட வசதிகளுடன் கூடிய தனங்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் உணவுப் பானங்களைப் பரிமாறும் பெண் ஊழியர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னர் மற்றும் முற்பகல் 6.00 மணிக்கும் முன்னர் பணியாற்றுவதற்கு இடமளிக்கும் வகையில் தேவையான சட்டத் திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.


குறித்த பணிகளுக்காக கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் பணிக்கொடையை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் அமைச்சரால் ஆக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருகோணமலை சட்டவிரோத புத்தர் சிலை விவகாரம்; கரைச்சி பிரதேச சபை கண்டனம்..!

0

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் ஏக மனதாக கண்டனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பான பிரேரணையை உறுப்பினர் முத்து சிவமோகன் கொண்டு வந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி, சுயேட்சைக் குழு, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ்க் கூட்டணி, போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவாக தமது கருத்துக்களை முன் வைத்தமையைத் தொடர்ந்து குறித்த சம்பவத்திற்கான கண்டனம் சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

அனுரவிற்கு சவாலாக மாறிய சட்டவிரோத விகாரை; களத்தில் தடயவியல் விசாரணைப் பிரிவினர்..!

0

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் நிலவரம் தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைக்காக இன்றைய தினம் (18.11.2025) காவல்துறை குற்றவியல் மற்றும் தடயவியல் விசாரணைப் பிரிவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த பகுதியில் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றதுடன் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கட்டுமானம் தொடர்பிலும் அளவுகளையும் அளந்தெடுத்துக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.


திருகோணமலை துறைமுக கடற்கரை வளாகத்திலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் நேற்று (17.11.2025) காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த புத்தர் சிலையுடன் கூடிய கூடாரம் கடலோர பாதுகாப்பு வலயத்திற்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்தது.


கடந்த 16 ஆம் திகதி, திருகோணமலையில் உள்ள கடலோர பாதுகாப்பு வலயத்திற்குள் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரையின் பிக்குகள் மற்றும் நன்கொடையாளர்கள் குழு மூலம் அங்கீகரிக்கப்படாத குடிசையொன்று கட்டப்பட்டு வருவதாகவும், அங்கு புத்தர் சிலை வைக்கப்படுவதாகவும் திருகோணமலை துறைமுக காவல்துறையிடம் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளை யாரும் நினைவு கூர முடியாது; அநுர அரசின் அறிவிப்பு..!

0

உரிழந்தவர்களை நினைவு கூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நினைவேந்தல் நடத்துவதற்கு 2024 நவம்பரில் இடமளிக்கப்பட்டது. 2025 நவம்பரிலும் அவ்வாறு தான்.

உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உரிய உரிமை மக்களுக்கு உள்ளது. எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் ஜே.வி.பி. மாவீரர்களுக்கு நினைவிடம் அமைக்கவில்லை.


அவர்களுக்கான நினைவுத்தூபி எம் மனங்களில் இருந்தால் போதும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வை காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேயே வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கை தமிழரசுக் கட்சி விலகி இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; பொலிசார் வெளியிட்ட விளக்கம்..!

0

திருகோணமலை துறைமுக காவல்துறை பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அமைதியின்மையைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

அத்துடன், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில தவறான செய்திகளும் உருவாக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அது தொடர்பான சரியான நிலைமையை தெளிவு படுத்துவதற்காகவே, அறிக்கையை வெளியிடுவதாக காவல்துறைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக, திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் தேரர்கள் மற்றும் அதன் நம்பிக்கையாளர்கள், திருகோணமலை நகரில் கடற்கரை பாதுகாப்பு வலயத்துக்குள் அத்துமீறி குடிலொன்றை அமைத்து புத்தர் சிலை ஒன்றை வைக்க முயற்சிப்பதாக முறைப்பாடு ஒன்று கிடைத்தது.

கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவத் திணைக்கள அதிகாரிகளே, திருகோணமலைத் துறைமுக காவல்துறை நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்தனர்.

அதற்கமைய, காவல்துறை அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று, குறித்த அத்துமீறிய நிர்மாண வேலையை நிறுத்துமாறு அறிவுறுத்திய போதிலும், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள பகுதியில், இதற்கு முன்னரும் அத்துமீறிய நிர்மாணம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


இதனை அகற்றுமாறு கோட்டை வீதி, திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீசம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதிக்கு சுற்றாடல் அமைச்சு கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி எழுத்து மூலம் அறிவித்திருந்தது

இதற்கு மத்தியிலேயே, பிரச்சினைக்குரிய நிர்மாணமும் புத்தர் சிலை பிரதிஸ்டையும் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இனங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்க வழிவகுக்கலாம் என இலங்கை காவல்துறையால் அவதானிக்கப்பட்டதாகவும் காவல்துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் அனைத்து இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி என்பதால், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி யாரேனும் புத்தர் சிலைக்குச் சேதம் விளைவித்தால், அது பிரதேசத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தலாம் என காவல்துறையினர் கருதியதாகவும் காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்தச் சந்தர்ப்பத்தில் புத்தர் சிலையை பாதுகாப்பாக அந்த குறித்த இடத்திலிருந்து அகற்றி, திருகோணமலைத் துறைமுக காவல்துறை நிலையத்துக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.


எனினும், அத்துமீறிய கட்டுமானத்தை நிறுத்தச் சென்றபோது, அந்த இடத்தில் கூடியிருந்தவர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தினர்.

இதன்போதே, அதனை காவல்துறை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக, காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எந்தச் சந்தர்ப்பத்திலும் தேரர்கள் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் காவல்துறையின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளியுங்கள்; ஆயிரம் விகாரை புகழ் சஜித் தெரிவிப்பு..!

0

திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரையில் நேற்று ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் பொலிஸார் தலையிட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார். இது வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

பௌத்த மதத்துக்கு அனைவரும் முன்னுரிமை அளியுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.


புத்த மதத்துக்கு முதன்மையான இடத்தை வழங்கும் அதேவேளையில்,

பிற மதங்களுக்கு மரியாதை அளிப்பதை உறுதி செய்யும் அரசமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தை மேற்கோள் காட்டி, 1951 இல் நிறுவப்பட்டு 2010 இல் புத்த விவகாரத் துறையில் பதிவு செய்யப்பட்ட இந்த விகாரை வழிபாட்டுத் தலமாக சட்டபூர்வ அந்தஸ்தைக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

புத்தர் சிலைகளை வைப்பது மற்றும் அறப்பள்ளி கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பித்தமைக்காகப் பொலிஸாருக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.


இது போன்ற செயல்கள் வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், பௌத்த பிரிவுகளின் மூன்று தலைமைப் பீடாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் அதைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வளர்ச்சி நடவடிக்கைகளைச் சீர்குலைக்கப் பொலிஸாரை அனுப்புவது ஏற்றுக் கொள்ள முடியாதது.


மேலும் அத்தகைய உத்தரவுகள் யாருடைய அதிகாரத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டன?

அரசு நாட்டின் உச்ச சட்டமான அரசமைப்பைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அதை மீண்டும் படிக்க வேண்டும்.என குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை கடந்த 2019 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் கட்டப்படும் எனத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கஞ்சாவுடன் ஐ.ம.சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது..!

0

பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன், சந்தேகநபர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதுடன், ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி உத்தியோகத்தராகவும் கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, பொலிஸார் உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, விற்பனைக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த 86 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

போதைப் பொருளுடன் கைதான யாழ். பல்கலை மாணவனுக்கு சிறை..!

0

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் குற்றத் தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (16) இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.


இதன் போது, ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 24 வயது மாணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் கந்தர்மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (17) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை எதிர்வரும் 30 திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாராணைகளை யாழ் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர சுகவீனம் காரணமாக காலமானார்..!

0

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாக 62 வயதில் காலமானார்.

நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.


அத்துடன் அவர் அமைச்சுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் பல அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகள் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைத் தீர்த்து வைப்பதில் முன்னோடியாகச் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை பகுதியை உலுக்கிய சம்பவம்; பெற்ற மகளை சீரழித்த தந்தை கைது..!

0

அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவியே இச்ச ம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.


குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையாக இருக்கும் 14 வயது மதிக்கத்தக்க இம்மாணவியை அவரது தந்தை இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸாருக்கு நேற்று மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


மேலும் கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!