Friday, August 28, 2026
Huisதாயகம்நீதித்துறை தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பு நடைமுறைகள் ஊடாகத் தீர்க்கப்படல் வேண்டும்..!

நீதித்துறை தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பு நடைமுறைகள் ஊடாகத் தீர்க்கப்படல் வேண்டும்..!

நீதிபதிகள் மற்றும் நீதித்துறை தொடர்பான கரிசனைகள் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வ நடைமுறைகள் ஊடாகத் தீர்க்கப்படல் வேண்டும் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முறையற்ற விதத்தில் நிகழ்த்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என எச்சரித்துள்ளது.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் தொடர்பில் ஏற்கனவே கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் வியாழக்கிழமை (27) அச்சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

பொது அதிகாரத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு கட்டமைப்பையும் போலவே நீதித் துறையும் சட்டபூர்வமான பரிசீலனைக்கும் பொறுப்புக் கூறலுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்புக்கள், நீதிபதிகளின் நடத்தை மற்றும் நீதி நிர்வாகம் என்பன உண்மையின் அடிப்படையிலும், நியாயமான மற்றும் பொறுப்பான முறையிலும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படலாம்.

எந்தவொரு நீதிபதிக்கும் எதிரான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான முறையில், உரிய சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, பொருத்தமான அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் ஊடாக வெளியக ரீதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனத்துவம் மற்றும் பொதுமக்களின் உரிமைகள் தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கும் பின்னணியில், அதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவுக்குவரும் பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவே இந்தத் திருத்தம் அவசரமாகக் கொண்டு வரப்படுவதாகப் பரவலான கருத்துக்கள் உள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்றத்திலும், சமூகவலைத்தளங்களிலும் முன்வைக்கப்படும் நீதித்துறை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பொறுப்புடன் கையாளப்படும் அதேவேளை, முறையற்ற விதத்தில் நிகழ்த்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!