Saturday, November 14, 2026
Huisதாயகம்காணாமல் போன 15 வயதுச் சிறுமி இரண்டு மாதக் குழந்தையுடன் மீட்பு..!

காணாமல் போன 15 வயதுச் சிறுமி இரண்டு மாதக் குழந்தையுடன் மீட்பு..!

ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 15 வயதுச் சிறுமியொருவர், இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் நக்கிள்ஸ் மலைத்தொடரிலுள்ள கற்குகையொன்றிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகில் அமைந்துள்ள உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே, கந்தகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியொருவர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்தார்.

இது தொடர்பில் சிறுமியின் குடும்பத்தினர் உடுதும்பர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து, உடுதும்பர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித தொம்பகம்மன தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

விசாரணைகளின் போது, பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் தினமும் தனிநபருக்குத் தேவையான அளவைவிட அதிகளவான அரிசியை வாங்கிச் செல்வது பொலிஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, குறித்த இளைஞரின் நடமாட்டத்தைக் கண்காணித்த பொலிஸார், அவரைப் பின்தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கு பொலித்தீன் விரிப்புகளால் மறைக்கப்பட்டிருந்த கற்குகையொன்றுக்குள் இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் சிறுமியொருவர் தங்கியிருந்ததைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தச் சிறுமியே ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 15 வயதுச் சிறுமி என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், 15 வயதுச் சிறுமியும் இரண்டு மாதப் பெண் குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

சிறுமியிடமும் கைது செய்யப்பட்ட இளைஞரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த கற்குகைக்குள்ளேயே குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பிரசவத்தின்போது குழந்தையின் தொப்புள் கொடி, கித்துள் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதமொன்றினால் வெட்டப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், காட்டுப் பகுதியில் கிடைத்ததாகக் கூறப்படும் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தி தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சையளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கித்துள் பாணி தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரமொன்றில் குழந்தையைக் குளிப்பாட்டியதாகவும் 23 வயது இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் குறித்த இளைஞருக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படும் அவரது 36 வயதுடைய உறவினர் ஒருவரையும் உடுதும்பர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட 15 வயதுச் சிறுமியும் இரண்டு மாதப் பெண் குழந்தையும் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!