Sunday, August 23, 2026
Huisதாயகம்பல்கலைக் கழகங்களில் 2025 A/L மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்..!

பல்கலைக் கழகங்களில் 2025 A/L மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்..!

பல்கலைக் கழகங்களில் நிலவும் கடும் நெரிசல் காரணமாக, 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக் கழகங்களில் சேர்த்துக் கொள்ள மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் ஆகலாம் என பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அந்த சம்மேளனம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்போது, தற்போதைய நிலையில் மூன்று உயர்தரக் குழுக்கள் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்காக காத்திருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் ஏற்கனவே இரண்டு மாணவர் குழுக்கள் பயில்கின்றனர். பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவை செப்டம்பர் மாதத்திற்குள் 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களைப் பல்கலைக் கழகங்களில் சேர்த்துக் கொள்ளுமாறு எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

ஆனால் பல்கலைக் கழகங்கள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன. மாணவர்களுக்கு விடுதிப் பிரச்சினைகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் விரிவுரையாளர்களால் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.

மாணவர்களை சேர்த்தல் மற்றும் தக்க வைத்துக் கொள்வது தொடர்பான திட்டமொன்றை அரசாங்கம் முன் வைத்தது. ஆனால் அந்தத் திட்டம் முன் வைக்கப்பட்டு இன்றுடன் ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தவோ அல்லது இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவோ அரசாங்கம் இதுவரை தலையிடவில்லை.

இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வழியில்லை. ஏற்கனவே அந்தப் பிள்ளைகள் ஒரு வருடமாக வெளியில் இருக்கிறார்கள். அவர்களைச் சேர்த்துக் கொள்ள சில பீடங்களில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆகலாம்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கல்வித்துறையை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதி அளித்தது.ஆனால் கடந்த காலங்களில் ஏராளமான பல்கலை விரிவுரையாளர்கள் பெருமளவில் பல்கலைக் கழகங்களை விட்டு வெளியேறினர்.

சில பீடங்களில் நான்கு மாணவர் குழுக்கள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது ஆறு மாணவர் குழுக்கள் வரை கல்வி பயின்று வருகின்றன. இதனால் நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு குழுவே பல்கலைக் கழகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு குழு உள்ளே வரக் காத்திருக்கிறது.

2025 ஆம் ஆண்டு குழுவும் காத்திருக்கிறது. அப்படியிருக்க, இப்போது 2026 ஆம் ஆண்டு குழுவும் வந்தால், மூன்று மாணவர் குழுக்கள் பல்கலைக் கழகங்களுக்கு வெளியே காத்திருக்கும் நிலை ஏற்படும் என பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!