கொந்தளிப்பான மத்திய கிழக்கு நிலப்பரப்பில், புயலின் மையமாக நின்று இஸ்ரேல் என்ற சிறிய நாட்டின் வரலாற்றையும் அதன் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் சக்தி மிக்க பெயராக இன்று விளங்குகிறது பெஞ்சமின் நெதன்யாகு எனும் பெயர்.
நவீன இஸ்ரேலின் அரசியல் வரலாற்றை நெதன்யாகுவை விலக்கி விட்டு ஒருபோதும் எழுத முடியாது. சுற்றிலும் எதிரி நாடுகளும், ஓயாத அச்சுறுத்தல்களும் நிறைந்த ஒரு சூழலில், தன் நாட்டின் பாதுகாப்பையும் தேசிய அடையாளத்தையும் முதன்மையாகக் கொண்டு, நவீன தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் இஸ்ரேலை உலகின் உச்சத்தில் நிறுத்திய அவரது தளராத மன உறுதியும், விட்டுக் கொடுக்காத அரசியல் ஆளுமையும் வரலாற்றுப் பக்கங்களில் ஆழப் பதிந்து விட்டன.

அரசியல் ரீதியான விவாதங்களும் விமர்சனங்களும் ஒருபுறமிருக்க, தாய் மண் பற்றும், தன் இனத்தின் மீதான பற்றும் ஒரு தலைவனை எத்தகைய எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு பிரதமர் நெதன்யாகுவின் வாழ்க்கையே சான்றாகும்.
இந்த வரலாற்று ஆளுமையின் வாழ்வியலிலிருந்தும், யூத இனத்தின் மீண்டெழுதலிலிருந்தும் உலகெங்கிலும் பரவி வாழும் தமிழ் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும், பெற வேண்டிய வழிகாட்டுதல்களும் ஏராளம்.
நெதன்யாகுவின் அரசியல் எழுச்சி
1949-இல் டெல் அவீவில் பிறந்த பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலிய ராணுவத்தின் மிக உயரிய ‘சயரத் மத்கால்’ என்ற சிறப்புப் படையில் பணியாற்றி நாட்டின் பாதுகாப்பிற்காகப் பல ஆபத்தான களங்களில் போரிட்டவர். தனது சகோதரனை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இழந்த சோகம், அவரது மனதை மேலும் இரும்பாக்கியது.
பிற்காலத்தில் அரசியல் களம் புகுந்து, ஐநாவிற்கான இஸ்ரேலின் தூதராகச் செயற்பட்டு, பின்னர் நாட்டின் மிக இளைய வயதுப் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இஸ்ரேலின் சிற்பி என்று போற்றப்படும் டேவிட் பென்-குரியனின் ஆட்சி கால சாதனையை முறியடித்து, அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற வரலாற்றைப் படைத்த நெதன்யாகு, தன்னை எப்போதும் “இஸ்ரேலின் பாதுகாவலன்” என்றே வெளிப்படுத்திக் கொண்டார்.
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் சர்வதேச அழுத்தங்களுக்கும் சலனப்படாத அவரது உறுதியான நிலைப்பாடு, உலகரங்கில் இஸ்ரேலை யாராலும் புறக்கணிக்க முடியாத ஒரு சக்தியாக மாற்றியது.
யூத இனத்தின் வரலாற்றுப் பாடம்
சொந்த நிலமின்றி, உலகம் முழுவதும் சிதறிக் கிடந்து, கொடுங்கோலன் ஹிட்லரின் பேரழிவுக்குப் பலியாகி, வரலாற்றின் பேரவலத்தைச் சந்தித்த யூத இனம், இன்றைக்கு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வல்லரசாக மாறியதன் பின்னணியில் இருப்பது அவர்களின் அடங்காத இனப்பற்று மட்டுமே.
அழிவின் விளிம்பிலிருந்து மீண்டு வந்த அவர்கள், அழிந்து போனதாகக் கருதப்பட்ட தங்களின் தாய் மொழியான ‘ஹீப்ரூ’வை மீண்டும் உயிர்ப்பித்து, நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்கள்.

அறிவியல், மருத்துவம், ஆயுத உற்பத்தி, பொருளாதாரக் கொள்கைகள் என அனைத்திலும் தங்களைச் சுயசார்புடையவர்களாக மாற்றிக் கொண்டார்கள். நெதன்யாகு போன்ற தலைவர்கள் இந்த தேசியவாத நெருப்பை அணையாமல் பாதுகாத்து, தன் இனத்தின் பாதுகாப்பை உலகளாவிய ரீதியில் உறுதி செய்தனர்.
உலகத் தமிழர்களின் சிந்தனைக்கு
இந்த வரலாற்றுச் சான்றுகளிலிருந்து உலகத் தமிழர்களாகிய நாம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. நாமும் வரலாற்றில் பல இடப்பெயர்வுகளையும், இழப்புகளையும், துயரங்களையும் சந்தித்த ஒரு தொன்மையான இனம். இன்றைக்கு புலம் பெயர்ந்து, உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நமது அறிவாலும் உழைப்பாலும் உயர்ந்து நிற்கிறோம். ஆனால், நமது வெற்றியும் அடையாளமும் தனித்தனியாகச் சிதறிக் கிடக்கும் வரை, உலகரங்கில் தமிழர்களுக்கான கூட்டு சக்தி உருவாவது கடினம்.

யூத இனம் எவ்வாறு தங்களின் தாய் மொழியையும், இன அடையாளத்தையும் தங்களின் மிகப் பெரிய பலமாக மாற்றியதோ, அதேபோல உலகத் தமிழர்களும் தங்களின் தொன்மையான தமிழ் அடையாளத்தையும், மொழியையும், பண்பாட்டு வேர்களையும் காப்பதைத் தங்களின் தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
1. நாம் வாழும் நாடுகளின் மொழிகளையும், சர்வதேசத் தொடர்புகளுக்கான ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்வது இன்றியமையாதது. ஆகவே, வீட்டில் தமிழில் பேசுவதையும், நமது குழந்தைகளுக்குப் பிழையின்றித் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுத் தருவதையும் ஒரு பண்பாட்டு செயற்பாடாக உணர்வுடன் முன்னெடுக்க வேண்டும். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை உணர்ந்து, தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறம், நீதி, ஆசார, ஒழுக்க சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்.
2. நெதன்யாகுவின் ஆட்சியில் இஸ்ரேல் எவ்வாறு உலகின் முன்னணி ‘ஸ்டார்ட்-அப்’ மற்றும் தொழில்நுட்ப மையமாக மாறியதோ, அதேபோல உலகத் தமிழர்களும் தங்களுக்குள் ஒரு வலுவான அறிவுசார் மற்றும் வணிக வலையமைப்பை (Global Tamil Network) உருவாக்க வேண்டும். தொழில்நுட்பம், வணிகம், அறிவியல், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இருக்கும் தமிழர்கள் ஒருங்கிணைந்து, வளர்ந்து வரும் இளம் தமிழ் தலைமுறையினருக்கு வழிகாட்டவும், முதலீடுகளை ஈர்க்கவும் வேண்டும்.
3. உலகின் எந்த மூலையில் ஒரு தமிழனுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், அவனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவும், உதவிகள் செய்யவும் எல்லைகளைக் கடந்த தமிழ் ஒற்றுமை இணைப்பு உருவாக்கப்படல் வேண்டும். அரசியல் வேறுபாடுகளை மறந்து, பண்பாட்டு மற்றும் பொருளாதார ரீதியில் உலகத் தமிழர்கள் ஒரு குடும்பமாக இணைய வேண்டும்.
4. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாங்கள் ஈட்டும் அறிவையும், செல்வத்தையும், அனுபவத்தையும் தாயகத்தின் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும். நமது தாய்நிலத்தைப் பொருளாதார ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் முன்னோக்கிச் செலுத்துவது நமது பொறுப்பாகும்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் வாழ்க்கை நமக்குக் கற்பிக்கும் மிகப்பெரிய பாடம், ஒரு இனத்தின் பாதுகாப்பு, சுயமரியாதை மற்றும் வளர்ச்சி என்பது மற்றவர்களின் கருணையால் வருவதல்ல, அது அந்த இனத்தின் சுய பலத்தாலும், தளராத மனவுறுதியினாலும் மட்டுமே உருவாக்கப்பட முடியும் என்பதாகும்.

நில அமைப்பால் நாம் பிரிக்கப்பட்டிருந்தாலும், தமிழர் என்ற ஒற்றை உணர்வால் நாம் அனைவரும் நமது தொன்மையான தமிழ் அடையாளத்தைப் பெருமையோடு நெஞ்சில் ஏந்தி, உலக அரங்கில் தமிழ் இனத்தின் பெருமையை உயர்த்த ஒன்றிணைவோம், அறிவால் உலகை வெல்வோம்!!!


Recent Comments