2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது, சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி T-சேட்களை அச்சிட்டமை தொடர்பான வழக்கில், அப்பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் (Managing Director) ரூமி ஜாபர் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127ஆவது பிரிவின் கீழ் இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் துறை (CID) விடுத்த கோரிக்கையை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவின் சேம்பரில் (அறையில்) நேற்று (03) சுமார் இரண்டு மணி நேரம் இந்த வாக்குமூலத்தை அவர் வழங்கினார்.
இதற்கு முன்னர், பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஸ்வர சேனாரத்ன மற்றும் மேலும் இரண்டு உயர் அதிகாரிகளும் நீதவானிடம் இரகசிய வாக்கு மூலங்களை வழங்கியிருந்தனர்.
குற்றப் புலனாய்வுத் துறையினரின் கூற்றுப்படி, ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் கோரிக்கையின் பேரில் 12,000 T-சேட்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதற்கான நிதி, பணியகத்தின் பணிப்பாளர் சபையின் எவ்வித அனுமதியும் இன்றி ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்போதைய அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவின் உத்தரவின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிழற்படம், தேர்தல் வாசகம் மற்றும் அரசியல் கூட்டணியின் பெயர் பொறிக்கப்பட்டு இந்த டீ-சர்ட்டுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024இல் வெளிநாட்டிற்குச் சென்ற முதல் சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை (Open Warrant) இன்றும் செல்லுபடியாகும் நிலையில் உள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Recent Comments