Thursday, November 5, 2026
Huisதாயகம்யாழ் தீவுப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பமான பெண்களை நகர்ப் பகுதிகளில் தங்குமாறு அறிவுறுத்தல்..!

யாழ் தீவுப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பமான பெண்களை நகர்ப் பகுதிகளில் தங்குமாறு அறிவுறுத்தல்..!

யாழ்ப்பாணத் தீவுப் பகுதிகளில் வசிக்கும், 36 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக உள்ள பெண்கள் யாழ்ப்பாண நகர்ப்புறப் பகுதிகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர் கொள்வதற்கான முன்னாயத்தங்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டம், நேற்று மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

பருவமழையினால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வது, அனர்த்த அபாயங்களைக் குறைப்பது மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பான உத்திகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

இந்த மாதம் யாழில் 331 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீவகம், அனலைதீவு மற்றும் நயினாதீவு போன்ற தீவுப் பகுதிகளில் வசிக்கும், 36 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக உள்ள பெண்கள், யாழ்ப்பாண நகரில் உள்ள உறவினர்களின் வீடுகளிலோ அல்லது ஊர்காவற்துறை (Kayts) வைத்திய சாலையிலோ தங்குமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மோசமான வானிலை நிலவும் காலங்களில் கடல் வழியாகப் பயணம் செய்வதில் உள்ள அபாயங்களைக் கருத்தில் கொண்டும், அனர்த்த காலப் பகுதியில் இந்தப் பெண்கள் பாதுகாப்பாகப் பிரசவிப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!