Saturday, November 14, 2026
Huisதாயகம்முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப் படுகின்றார்களா..?

முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப் படுகின்றார்களா..?

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப் படுகின்றார்களா என இன்று (14.11.2026) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் கேள்வி நேரத்தின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்கள் இடம்பெற்ற காலப் பகுதியிலும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகள் தொடர்பாக தனது கேள்விகளை முன்வைத்தார்.

அவரது கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் 12,196 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டனர் எனவும் அவர்கள் அனைவரும் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு காலத்தில் அவர்களுக்கு தொழிற்பயிற்சி, கலை கலாச்சார செயற்பாடுகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கியதாகவும் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் கற்பதற்கான உதவிகள் உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

வரவு–செலவுத் திட்டத்தில் சமூகப் பாதுகாப்புக்காக 230 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற போராளிகள் தற்போது வேலைவாய்ப்பு, வாழ்வாதார மற்றும் சமூக மறுவாழ்வு பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

எனவே போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்டங்களுக்கான குறைந்த வட்டியிலான கடனுதவிகளை தற்போதைய சமூகப் பாதுகாப்பும் வறுமை ஒழிப்பும் திட்டத்தின் கீழ் பெறமுடியுமா என வினவினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் அவ்வாறான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது போராளிகளும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், புனர்வாழ்வு நிலையங்களில் இருந்த போது சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகம் அல்லது மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல புனர்வாழ்வு முடிந்த பின்னரும் முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

எனவே புனர்வாழ்வு நிலையங்களில் இருந்தபோது சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகம் அல்லது மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானதாக செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக தற்போதுள்ள அரசாங்கம் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமா என்பதோடு முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக தற்போதும் கண்காணிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் பதில் என்ன என வினவினார்.

பதிலளித்த அமைச்சர், குறித்த விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆரம்பகாலங்களில் முன்னைய அரசாங்களின் காலங்களில் கண்கானிக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கத்திற்கு அந்த தேவை இல்லை எனவும் தெரிவித்ததுடன், புனர்வாழ்வு நிலையங்களில் இருந்த போது சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகம் அல்லது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!