ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் இன்று (11) காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரால் பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நிர்வாக சீர்கேடுகள், நிதி மோசடிகள் என பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபடுவதாகவும், பாடசாலையின் வளர்ச்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்வதாகவும் தெரிவித்து, அதிபரை பாடசாலையிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை முன்வைத்து பாடசாலை நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பெற்றோர் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கத்தினால் வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அதிபர் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு அமைக்கப்பட்டு ஆரம்ப புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டும், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும் இந்த அதிபர் வலயத்துடன் இணைத்தே விசாரணை செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஒரு விசாரணையை மாகாண கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. அதனால் இவ்விசாரணையை கண்துடைப்பாகவே நாங்கள் கருதுகிறோம் எனவும் போராட்டக்காரர்கள் இதன் போது தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து, போராட்ட இடத்துக்கு சென்ற ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் நிஷாந்தன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் இந்திக்க ஆகியோரிடம் போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.
இதன் பிரதிகள் வட மாகாண பொதுச்சபை ஆணைக்குழு, ஆளுநர் செயலகம், ஆளுநர் குறைகேள் வலையமைப்பு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலகம் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
Recent Comments