பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம், சமூக வலைத் தளங்களிலும் அரசியல் களத்திலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது.
வவுனியா ஊடகத் தளத்தில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்த முழுமையான மற்றும் தெளிவான விளக்கத்தை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.
பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த அர்ச்சுனா ராமநாதன், வேட்டி மற்றும் தேசிய அங்கியை (National Shirt) அணிந்து, அதன் மேல் பாரதியார் பாணியிலான கோட் ஒன்றினை அணிந்திருந்தார். இருப்பினும், அவரது உடையை காரணம் காட்டி பாராளுமன்ற பணியாளர்கள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்த நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்ற பிரதி முதல் கோலாசானாகிய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

பாராளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் உடை ஒழுக்கத்தைப் பேண வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்ததாலும், சபை நடவடிக்கைகளின் போது நிகழ்ந்த இந்த அசௌகரியத்தை அவையின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய கடமை அவருக்கு இருந்ததாலும், அவர் இது குறித்து சபையில் உரையாற்றினார்.
இதன்போது, அவர் தனது உரையில்,
“பாராளுமன்றத்திலே உடை அணிதல் தொடர்பான சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அந்த சம்பிரதாயங்களை மீறும் வகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் இன்று உடை அணிந்து வந்திருக்கிறார்” என்பதையே சபாநாயகருக்கும் சபைக்கும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதனை ஊடகங்கள் திரிவு படுத்தி “வேட்டியுடன் வந்திருந்தார்” என்று பாராளுமன்ற உறுப்பினர் M.ஜெகதீஸ்வரன் குறிப்பிட்டதாக போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார்கள். அதனை அறையும் குறையுமாக தெரிந்து கொண்ட சமூக வலைத்தள ஊடகவியலாளர்களும் ஏளனம் செய்யும் விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்த உண்மைத் தன்மை தெரிந்திருந்தும், M.ஜெகதீஸ்வரன் மற்றும் தேசிய மக்கள் சக்தி மீதான காழ்ப்புணர்ச்சி கொண்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், அவர்களுக்கு சார்பான ஊடகக் கட்டமைப்புகளும் இதனை ஒரு சர்ச்சையாக உருமாற்றி சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக்கியுள்ளனர்.
மேலும் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளிலும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வரும் இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இவர்களின் அர்ப்பணிப்பான அரசியலுக்கு எதிராக, சமூகத்தை பிழையாக வழிநடாத்த துடிக்கும் சிலர் பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர் என சமூக ஆர்வலர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.

இவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது என்றும் சமூக வலைத் தளங்களிலும், தமக்குச் சார்பான ஊடகங்கள் மூலமாகவும் தவறான தகவல்களைப் பரப்பி, தேசிய மக்கள் சக்தியின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிப்பதுடன், இந்த ஆட்சியையும் வீழ்த்தத் துடிக்கின்றனர் எனக் கருத்துத் தெரிவித்தும் வருகின்றனர்.
இத்தகைய காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் போலிப் பிரச்சாரங்களுக்குத் துணை நிற்பவர்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


Recent Comments