Sunday, July 12, 2026
Huisதாயகம்விவசாயிகளிடமிருந்து துரித கதியில் நெற்கொள்வனவை மேற்கொள்க; ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!

விவசாயிகளிடமிருந்து துரித கதியில் நெற்கொள்வனவை மேற்கொள்க; ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,046மெற்றிக் தொன் அளவில் 2025 ஆம் ஆண்டின் சிறுபோக நெல்லும், 4,172மெற்றிக்தொன் அளவில் 2025/2026 பெரும்போக நெல்லும் களஞ்சிய சாலைகளில் தேங்கிக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு களஞ்சிய சாலைகளில் தேங்கியுள்ள நெல்லை உடனடியாக அகற்றிவிட்டு, துரிதகதியில் 2026 ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சிய சாலைகளில் தேங்கியுள்ள நெல்லை விரைவாக வவுனியா உள்ளிட்ட பிற மாவட்டங்களிலுள்ள களஞ்சிய சாலைகளுக்கு மாற்றம் செய்துவிட்டு, விரைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரி பதிலளித்துள்ளார்.

பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற குழு அறையில் கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

அந்தவகையில் அமைச்சர் லால்காந்தவின் தலைமையில், பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த வகையில் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. குறிப்பாக சிறுபோக நெற்கொள்வனவு தாமதமாகுவது தொடர்பில் சுட்டிக்காட்டி, எப்போது நெல் சந்தைப்படுத்தல் சபையால் நெற்கொள்வனவு மேள்கொள்ளப்படும் என்பதை கேட்டிருந்தேன்.

இந்நிலையில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 13ஆம் திகதியும், மன்னார் மாவட்டத்தில் ஒருசில நாட்கள் பிந்திய நிலையும் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை சார்ந்த அதிகாரியால் இதன் போது பதில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ள முடியாத நிலையே ஏற்படுமென இதன்போது நான் குறித்த அதிகாரியிடம் தெரிவித்திருந்தேன்.

ஏன் எனில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் இதுவரை உரியவகையில் வெளியேற்றப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சிய சாலைகளில் அதிகளவான நெல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டின் சிறுபோக நெல் ஆறு களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 3,046மெற்றிக் தொன் நெல் இவ்வாறு களஞ்சிய சாலைகளில் தேக்க நிலையில் காணப்படுகின்றது.

இதுதவிர 2025/2026 பெரும்போக நெல் 16களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. 4,172 மெற்றிக் தொன் நெல் இவ்வாறு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல மெற்றிக் தொன் நெல் களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டு தரமிழந்து செல்கின்றது.

இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள களஞ்சிய சாலைகள் அனைத்திலும் நெல் நிறைந்து காணப்படுகின்றது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருடைய முயற்சியால், களஞ்சிய சாலைகள் வேறு திணைக்களங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டு கடந்த பெரும்போக காலத்தில் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லும் களஞ்சிய சாலைகளில் இருந்து உரிய வகையில் அப்புறப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது என்ற விடயத்தினைச் சுட்டிக்காட்டினேன்.

இவ்வாறு களஞ்சியசாலைகளை நிறைத்து வைத்துக் கொண்டு எவ்வாறு எதிர்வரும் 13ஆம் திகதி சிறுபோக நெற்கொள்வனவை ஆரம்பிக்கப் போகின்றீர்கள் என இதன் போது கேள்வி எழுப்பியிருந்தேன்.

எனவே களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை உரிய வகையில் அகற்றிவிட்டு, மிகவிரைவாக நெற்கொள்வனவை ஆரம்பிக்குமாறும் இதன்போது வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சியசாலைகளில் தேங்கிக்கிடக்கின்ற நெல்லை வாகனங்களின் மூலம் வவுனியா உள்ளிட்ட ஏனைய இடங்களில் காணப்படுகின்ற களஞ்சிய சாலைகளுக்கு மாற்றம் செய்துவிட்டு, சிறுபோக நெற்கொள்வனவு மேற்கோள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரி இதன் போது பதிலளித்தார்.

குறித்த செயற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு துரித கதியில் விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு நான் தொடர்ந்தும் வலியுறுத்தியிருந்தேன்.

அத்தோடு நெல்லின் விலை நிர்ணயம் தொடர்பிலும் இதன் போது பேசப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!