அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு தேர்தலுக்குப் பிந்தைய உச்சநிலையான 65 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைந்துள்ளது என்று வெரிடே ரிசர்ச் நிறுவனத்தால் நடத்தப்பட்ட அண்மைய ‘Mood of the Nation’ தொடர்பான கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2026 இல் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பின்படி, கடந்த பெப்ரவரியில் 65 சதவீதமாக பதிவான அரசாங்கத்திற்கான ஆதரவு கணிசமாகக் குறைந்து, தற்போது 49.83% ஆகப் பதிவாகியுள்ளது.

பொருளாதார முன்னேற்றம் குறித்த மக்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள அதிருப்தியே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என அக்கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
பொருளாதார மனநிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், வெரிடே ரிசர்ச்சின் ‘பொருளாதார நம்பிக்கைச் சுட்டெண்ணையும்’ (Economic Confidence Index) எதிர்மறை நிலைக்குத் (Negative territory) தள்ளியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் -39 ஆக இருந்த இச்சுட்டெண், 2025 பெப்ரவரிக்குப் பின்னர் நேர்மறை நிலைக்கு நகர்ந்து,அண்மைய கணிப்பில் இச்சுட்டெண் -8 ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த கருத்து கணிப்பில், பொருளாதார நிலைமைகள் மேம்பட்டு வருகின்றன என்று நம்பும் பதிலளிப்பாளர்களின் எண்ணிக்கை, முந்தைய கணிப்பில் 64% ஆக இருந்த நிலையில் தற்போது 41.63% ஆகக் குறைந்துள்ளது.

அதேவேளை, பொருளாதாரம் “மோசமடைந்து வருகிறது” என்று நம்புபவர்களின் சதவீதம், முன்னர் இருந்த சுமார் 15%-உடன் ஒப்பிடுகையில் தற்போது 40.29% ஆக உயர்ந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், அதாவது 55.59% பேர், தற்போதைய பொருளாதார நிலையை “மோசமானது” என மதிப்பிட்டுள்ளனர்.
வெறும் 38% பேர் மட்டுமே பொருளாதார நிலைமை “நல்லது” அல்லது “மிகச் சிறந்தது” எனக் கருதுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.


Recent Comments