Monday, August 24, 2026
Huisஇந்தியாபுதுச்சேரி தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு; தனியார் தொழிற் சாலையில் அத்துமீறல்..!

புதுச்சேரி தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு; தனியார் தொழிற் சாலையில் அத்துமீறல்..!

புதுச்சேரி அடுத்த திருபுவனை தொழிற் பேட்டையில் ஏராளமான தொழிற் சாலைகள் உள்ளன. இங்குள்ள ஒரு தனியார் தொழிற் சாலைக்குள், தவெக எம்எல்ஏ‌ சாய் ஜெ.சரவணகுமார் ஆய்வு செய்வதற்காக நேற்று உள்ளே சென்றார்.

‘அப்போது தொழிற் சாலை நிர்வாகத்தினர் எதற்காக உள்ளே வருகிறீர்கள்? எதற்காக ஆய்வு செய்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டு தடுத்ததாக தெரிகிறது. இதனால் சாய் ஜெ.சரவணகுமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், தொழிற்சாலை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தொழிற்சாலை நிர்வாகி சிவராமகிருஷ்ணன், திருபுவனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் 5 பிரிவின் கீழ் சாய் சரவணகுமார் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டியலினத்தவர் என சாதியை குறிப்பிட்டு தொழிற் சாலைக்குள் வரக்கூடாது என தொழிற்சாலை நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் தவெக எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன்குமார் இன்று புதுச்சேரி பிசிஆர் செல்லில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ‘எனது தொகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பட்டியலின தொழிலாளர்களுக்கு சாப்பாடு தட்டில் பாகுபாடு காட்டுவதாகவும், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் நசுக்கப் படுவதாகவும், மக்கள் பயன்படுத்தக் கூடிய குளம், கோயில் இடங்கள் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் பார்வையிட காவல் துறை அதிகாரி, கொம்யூன் அதிகாரி, தொழிற்சாலை நிர்வாக அலுவலர்களிடம் முறைப்படி தெரிவித்து, தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் சென்றேன்.

அப்போது அந்த நிறுவனத்தின் ஹெச்ஆர் மேலாளர் அருண்குமார், சிவசங்கர், காவலர்கள் மற்றும் பெயர் தெரியாதவர்கள் 30 பேர் என்னை உள்ளே வரக்கூடாது என்று தடுத்தனர். தொகுதி எம்எல்ஏ உள்ளே வரக் கூடாதா என்று கேட்டதற்கு என்னையும், எனது உதவியாளர் நான்கு பேரையும் பார்த்து நீங்கள் பட்டியலினத்தை சேர்ந்த எம்எல்ஏ நிறுவனத்துக்குள் வரக் கூடாது என்று மீண்டும் தடுத்தனர்.

மேலும் காவலாளி அறையில் அமர வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.

சாதியின் அடிப்படையில் பட்டியலின எம்எல்ஏவை உள்ளே வரக் கூடாது என்று கூறி தடுத்த ஹெச்ஆர் இருவர் மீதும் மற்றும் பெயர் தெரியாத நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்’ என்று அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!