Monday, August 24, 2026
Huisதாயகம்இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் எஸ்.மயர் கொழும்பு வருகை..!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் எஸ்.மயர் கொழும்பு வருகை..!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எரிக் எஸ். மயர், தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று திங்கட் கிழமை (24) கொழும்பை வந்தடைந்தார்.

இலங்கைக்கான அமெரிக்காவின் 29 ஆவது தூதுவராகப் பணியாற்றவுள்ள எரிக் மயர், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்குக் கிடைத்த கௌரவமாகும். அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும், எமது பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும் மற்றும் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் மக்களுக்கும் அதிகரித்த செழிப்பை வழங்கும் அமெரிக்க – இலங்கை பங்காண்மையை மேம்படுத்துவதற்காக, எமது இரு நாடுகளின் ஜனநாயகங்களுக்கிடையில் காணப்படும் பலமான அடித்தளத்தின் அடிப்படையில் உறவுகளை மேலும் கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறேன்” என எரிக் மயர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்படுவதற்கு முன்னர், நோர்வேயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராக எரிக் மயர் பணியாற்றியுள்ளார்.

அதற்கு முன்னதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தில் சிரேஷ்ட பணியக அதிகாரியாகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.

இலங்கையில் தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதில் எரிக் மயரின் தூதுவர் பதவிக்காலம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!