Monday, August 24, 2026
Huisதாயகம்நாட்டை வீழ்ச்சிக்குத் தள்ளியவர்கள் இன்று புதிய வேடத்தில் அரசியல் நடத்துகின்றனர்..!

நாட்டை வீழ்ச்சிக்குத் தள்ளியவர்கள் இன்று புதிய வேடத்தில் அரசியல் நடத்துகின்றனர்..!

கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2029 ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதாகக் கூறிக் கொண்டு, நாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று கிராமம் கிராமமாகவும், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் மற்றும் குளங்கள் தோறும் சென்று புதிய பாணியிலான அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். மெட்டிகளிலும், தொட்டிகளிலும், மரக்கிளைகளிலும் ஏறி நின்று கதைக்கும் நிலைக்கு இன்றைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) பல மணி நேரம் விசாரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில், ‘எனக்கு எதுவுமே தெரியாது, அந்த வீடுகள் எனக்குச் சொந்தமானவை அல்ல’ என ஊடகங்களுக்கு முன்னால் அவர் கூறி வருகிறார்.

ராஜபக்ஷ குடும்பத்தினரின் இந்த ‘நாங்கள் திருடர்கள் இல்லை’ என்ற நாடகம் நாட்டிற்குப் புதிதல்ல. மல்வானை பகுதியில் பஷில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட பிரமாண்ட மாளிகை விசாரணையின் போது ‘எனக்குச் சொந்தமானதல்ல’ எனக் கூறப்பட்டது.

அதேபோன்றுதான் கதிர்காமத்தில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீடும் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டது. உரிமையாளர் இல்லாத சொத்துக்கள் என்று கூறி தப்பிப்பதே அவர்களின் வழக்கம்.

இறுதியில் அந்த மாளிகைகளைத் தங்களுக்கான விடுதியாகத் தருமாறு பல்கலைக் கழக மாணவர்கள் போராடும் நிலைமை ஏற்பட்டது.

திருடன் ஒருபோதும் தான் திருடன் என்று ஒப்புக் கொள்ளப் போவதில்லை. நாட்டின் பொருளாதாரக் கொலைகாரர்கள் வேறு யாருமில்லை, ராஜபக்ஷ குடும்பம்தான் என்று அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, இன்று நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஊழலற்ற புனிதர் போல வேடமிட்டு மன்னிப்புத் தேட முற்படுகிறார்.

நீங்கள் செய்த பாவங்களுக்குக் கோவில் கோவிலாக, தேவாலயம் தேவாலயமாக, பள்ளிவாசல்கள் அல்லது விகாரைகளுக்கு சென்றாலும் நிச்சயமாக மன்னிப்பு கிடைக்கப் போவதில்லை.

நாட்டின் வரலாற்று ரீதியான பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளையும் உழைக்கும் மக்களையும் வீதியில் இறக்கிய அநீதி, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் ஆகிய பாவங்களுக்கான தண்டனையை எந்த வழிபாட்டுத் தலத்திற்குச் சென்றாலும் கழுவிவிட முடியாது.

கடந்த காலத்தில் நாட்டின் வளங்களைச் சூறையாடி, மக்களை நடுத் தெருவில் விட்ட அதே கும்பல், இன்று புதிய வடிவத்தில் வந்து உங்களை ஏமாற்றப் பார்க்கிறது.

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான இந்த அரசியல் சக்திகளை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு, இனி ஒருபோதும் ஏமாறாமல் அவர்களை முற்றாக நிராகரிக்க வேண்டும்” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!