Tuesday, August 25, 2026
Huisகட்டுரைகள்அடங்காப்பற்றின் அடையாளம் மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்..!

அடங்காப்பற்றின் அடையாளம் மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்..!

வரலாறு என்பது வெறும் குறிப்புகள் இல்லை மாறாக தாய் மண்ணின் விடுதலைக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களின் செங்குருதியால் எழுதப்படும் காவியம். ஈழத் தமிழர்களின் தன்னாட்சி அதிகாரத்திற்கும், தாய் மண் பற்றிற்கும், போர்த் திறனுக்கும் மிகச்சிறந்த சான்றாக இன்றுவரை விளங்கும் வரலாற்றுப் பெருநிலம்தான் “அடங்காப்பற்று” என்றழைக்கப்பட்ட வன்னிப் பெருநிலம்.

அந்நியர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் (டச்சு), மற்றும் பிரித்தானியர் என உலகின் பெரும் வல்லரசுகளின் ஆதிக்க வெறிக்கு எதிராகவும், அவர்களின் அடிமை விலங்கை உடைத்தெறியவும் நிமிர்ந்து நின்ற வன்னி மண்ணின் இறுதித் தமிழ் மன்னன் பாயும்புலி குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.

வன்னி நிலத்தின் தொன்மை

இலங்கையின் வடபகுதியில் பரந்து விரிந்த வன்னி பெருநிலம், பண்டைய காலம் தொட்டே தன் சுயாட்சியையும் வீரத்தையும் விட்டுக் கொடுக்காத பண்பாட்டுப் பூமியாக விளங்கியது. தற்போதைய முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மற்றும் கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களையும் உள்ளடக்கிய அடர்ந்த காடுகளும், ஏரிகளும், கடல்களும், செழிப்பான நிலங்களும் நிறைந்த பெரும் நிலமே அன்றைய வன்னி ராஜ்ஜியம் ஆகும்.

அடங்காப்பற்று

யாழ்ப்பாண ராஜ்ஜியமும், கோட்டை ராஜ்ஜியமும் அந்நியரின் செல்வாக்கிற்கு உட்பட்ட கால கட்டங்களிலும் கூட, வன்னி நிலம் அந்நியர்களுக்கு எதிராக தனது சுதந்திர இறைமையை நிலை நிறுத்தியது. இதன் காரணத்தினாலேயே இந்நிலம் “அடங்காப்பற்று” (அந்நியரின் ஆட்சிக்கு அடங்காத பற்று நிலம்) என வரலாற்று சிறப்புடன் அழைக்கப்பட்டது. அடர்ந்த காடுகளும், சதுப்பு நிலங்களும், வன்னியின் தரை அமைப்பும் அங்கு வாழ்ந்த மக்களுக்குப் போர் உத்திகளை இயல்பாகவே கற்றுக் கொடுத்தன.

பண்டார வன்னியனின் எழுச்சியும் வன்னி நிலமும்

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இலங்கைத் தீவு முழுவதும் ஒல்லாந்தரின் (டச்சு) ஆதிக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல பிரித்தானிய (ஆங்கிலேய) பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லத் தொடங்கியது. ஆனால் வன்னி நிலமோ பண்டார வன்னியனின் தலைமையில் அடங்காப்பற்றாக நிமிர்ந்து நின்றது.

குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன், வன்னிய குறுநில மன்னர்களின் மரபில் வந்து வன்னியின் சுயாட்சியைப் பாதுகாக்கும் பொறுப்பை எதுவித சமரசமுமின்றி ஏற்றுக் கொண்டான். தனது சகோதரர்களான பெரிய மெய்யனார், கயிலாய வன்னியன் மற்றும் தளபதிகளின் துணையோடு வன்னி மண்ணை உரமேற்றத் தொடங்கினான்.

இந்த நிலையில், ஆங்கிலேயர்கள் வன்னி நிலத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டவும், தமிழர்களைத் தம் அடிமைகளாக மாற்றவும் எண்ணினர். ஆனால், பண்டார வன்னியன் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கட்டளைகளுக்குப் பணியாது, வன்னி மண்ணின் சுதந்திரத்தை நிலைநிறுத்தினான்.

இவ்வாறு வரலாறும் நகர்ந்த போது வன்னியின் இறைமைக்கு இடையூறாக இருந்த முல்லைத்தீவுக் கோட்டையைக் கைப்பற்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு மாவீரன் பண்டார வன்னியன் கொடுத்த மிகப்பெரிய சாட்டையடி, 1802 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு கோட்டை போராகும்.

முல்லைத்தீவுக் கடற்கரையில் ஆங்கிலேயர்கள் தமது இராணுவக் கோட்டையிருந்து வன்னியைக் கண்காணித்து வந்தனர். அங்கு பெருமளவிலான ஆயுதங்களும், பீரங்கிகளும் இருந்தன. கண்டி மன்னர்களுடன் நல்லுறவைப் பேணிய பண்டார வன்னியன் ஒரு பெரும் தாக்குதலுக்குத் திட்டமிட்டான்.

ஆம், 1802 ஆகஸ்ட் 25 அன்று, பண்டார வன்னியன் தலைமையிலான வன்னிப் புலிப் படை, முல்லைத்தீவிலிருந்த ஆங்கிலேயரின் கோட்டையை நோக்கிப் புயல் போலப் பாய்ந்தது. நவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள், வன்னி வீரர்களின் பாய்ச்சலுக்கும், வாள் வீச்சுக்கும் நிலை குலைந்து போயினர்.

மிகக் குறுகிய நேரத்திற்குள் முல்லைத்தீவுக் கோட்டை பண்டார வன்னியனின் வீரப் படையால் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. கோட்டையிலிருந்த ஆங்கிலேய சிப்பாய்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். அங்கிருந்த பீரங்கிகளும் பெரும் அளவிலான வெடிமருந்துகளும் பண்டார வன்னியனின் படையால் கைப்பற்றப்பட்டன.

அங்கிருந்த ஆங்கிலேயரின் கொடி முல்லைத்தீவுக் கோட்டையிலிருந்து அறுத்து எறியப்பட்டு, அடங்காப்பற்றின் சுதந்திரக் கொடி முல்லைக் கோட்டையில் கம்பீரமாகப் பறந்தது. இத்தாக்குதல் அன்றைய பிரித்தானிய பேரரசையே உலுக்கிய ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாகும்.

ஆங்கிலேயர்கள் சூரியன் அஸ்தமிக்காத தங்களின் பேரரசை விரிவுபடுத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், ஈழத்தின் வடக்கே வன்னியில் ஓர் சிற்றரசிடம் அவர்கள் சந்தித்துப் பின்வாங்கிய தோல்விகள் மிகமிக அதிகம்.

ஆங்கிலேய தளபதியான லெப்டினன்ட் வான் டிரிபெர்க் (Lieutenant von Driberg) பலமுறை பெரும் படைகளுடன் வன்னிக்குள் ஊடுருவ முயன்றும், பண்டார வன்னியனின் போர் உத்திகளால் தொடர் தோல்விகளையே சந்தித்தான்.

ஒருபோதும் போர்க்களத்தில் பண்டார வன்னியனை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், எப்போதும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களின் “துரோகம்” எனும் கொடூரமான ஆயுதத்தைக் கையில் எடுத்தனர். பண்டார வன்னியனுக்கு நெருக்கமான சிலரை பணம் மற்றும் அதிகார ஆசைகாட்டி ஆங்கிலேயர்கள் தங்கள் பக்கம் இழுத்தனர்.

1811 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, கற்சிலைமடுவில் பண்டார வன்னியன் தனது சிறிய படையுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, துரோகிகளின் வழிகாட்டுதலில் லெப்டினன்ட் வான் டிரிபெர்க் தலைமையிலான ஆங்கிலேயப் படை அப் பகுதியைச் சூழ்ந்த போதும் பண்டார வன்னியன் அஞ்சாமல் வாளேந்தி வீரத்துடன் போர் புரிந்தான். வன்னி வீழ்ந்த மிகக் குறுகிய காலத்தில் அதாவது 1815 உடன் முழு இலங்கையும் ஆங்கிலேயர் வசமாகியது.

தாய் மண்ணின் சுதந்திரத்திற்காகத் தன் இரத்தத்தைச் சிந்தி, மாவீரனாகத் தன் உயிரைத் தியாகம் செய்த பண்டார வன்னியனின் மறைவோடு வன்னி நிலத்தின் சுயாட்சி தற்காலிகமாக ஆங்கிலேயரிடமும் அதன் பின் வந்தவர்களிடமும் வசப்பட்டாலும், அவன் விதைத்துச் சென்ற சுதந்திர உணர்வும், வீரமும் ஈழத் தமிழர்களின் நரம்புகளில் இன்று வரை அழியாத தழலாக உழன்று கொண்டு இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில், எமது பண்பாடு, கலாசாரம், மண், கல்வி, மொழி என்பன புதிய வடிவிலான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

அன்று அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக பண்டார வன்னியன் காட்டிய அதே உறுதியை இன்று எமது அடையாளங்களை பாதுகாப்பதில் காட்ட வேண்டும். எம் மறவர்கள் தம் தம்மை விதையாக்கி, இரத்தம் சிந்தி பாதுகாத்த எமது தாய் மண்ணையும், எமது தமிழ் மொழியையும், எமது வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த பண்பாட்டையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

மாவீரன் பண்டார வன்னியன் ஆண்ட காலம், தமிழர்களின் சுயாட்சி அதிகாரத்திற்கு சிறந்த சான்றாக காணப்படுகிறது, அந்நிய சக்திகளுக்கும் அவர்களின் அற்ப சலுகைகளுக்கும் நாம் எந்தவொரு சூழலிலும் விலை போய்விடக் கூடாது என்பதே பண்டார வன்னியனின் வாழ்வியல் காட்டும் எமக்கான வாழ்க்கைப் பாடம்.

நாம் ஒவ்வொருவரும், சுயநலங்களையும், சாதி, பிரதேச, வர்க்க வேறுபாடுகளையும் களைந்து, பண்டார வன்னியனின் வழியில் மானத் தமிழர்களாக ஒன்றிணைந்து எமக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்வதே மண் மீட்பு போரில் ஆகுதியாகிய ஒவ்வொரு வீர மறவருக்கும் செய்யும் கைம்மாறு.

” ஈழத் தமிழினம் உள்ளவரை பண்டார வன்னியனின் வீரம் மறையாது “

– பிரசாந்த்

 

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!