Friday, September 4, 2026
Huisதாயகம்கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது; யாரும் உரிமை கோர முடியாது - அமைச்சர் சந்திரசேகர்

கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது; யாரும் உரிமை கோர முடியாது – அமைச்சர் சந்திரசேகர்

கச்சதீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (04) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், இந்தப் பயணம் கச்சதீவு விவகாரம் தொடர்பானது அல்ல எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி வருவதால் வடக்கு கடற்பரப்பின் கடல் வளமும், வடபகுதி மீனவர்களின் தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது, கடல் வளத்தைப் பாதுகாப்பது மற்றும் இலங்கையின் கடல் எல்லையை உறுதியாகப் பாதுகாப்பது தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் கச்சதீவு தொடர்பில் அண்மையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர்,

சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையின் ஆட்சிப் பகுதிக்கு உட்பட்டது என வலியுறுத்தினார்.

மேலும், தமிழக அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பையும் வாக்கு வங்கியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக கச்சதீவு விவகாரத்தை மீண்டும் மீண்டும் அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை மையமாகக் கொண்டு சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க தரப்புகளுக்கு இடையில் இடம்பெறும் அரசியல் போட்டி மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படுவதல்ல எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல் சலசலப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளங்களைப் பாதுகாப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!