மன்னாரில் பொலிசாரின் வாகனத்திற்கு தீ வைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியகுச்சிவி குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வீடொன்றின் பின்புறத்தில் சட்டவிரோதமான முறையில் மர ஆலை இயங்கி வருவதாக மடு பொலிஸ் நிலையத்திற்கு இரகசியத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நான்கு பொலிசாரைக் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
குறித்த சட்டவிரோத மர ஆலையை நடத்திச் சென்ற சந்தேகநபரை பொலிசார் கைது செய்ததுடன் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான முறித்த மரங்கள் மற்றும் 37 மரவேலை உபகரணங்களைக் கைப்பற்றி பொலிசாரின் கப் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மனைவி கத்தி கூச்சலிட்டு அருகில் உள்ள கிராம வாசிகளையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார்.
பின்னர் காணியின் பிரதான வாயிலை மூடி பொலிசாரை வெளியேற முடியாதவாறு தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து சந்தேகநபரின் மனைவி பொலிசாரின் கப் வாகனத்தைச் சுற்றி பெட்ரோலை ஊற்றி வாகனத்திற்கு தீ வைக்கப் போவதாக பொலிசாருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயன்றமை மற்றும் தீ வைக்க முற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபரின் மனைவி உட்பட 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மடு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments