இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய கப்பல்களுக்கு பொருட்கள் மற்றும் தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பில் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான தகவல்களை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார்.
இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடத்தைக் கருத்திற் கொண்டு, நாட்டின் கடற்பரப்புக்கு அருகிலுள்ள கடல் வழித்தடங்களை ஏராளமான சர்வதேச கப்பல்கள் வழக்கமாகப் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தேவையான சந்தர்ப்பங்களில் அந்தக் கப்பல்களுக்கு தேவையான ஒத்துழைப்பும் தளவாட வசதிகளும் வழங்கப்படுவதாகவும் தற்போது சுமார் 47 கப்பல்கள் இலங்கையின் 12 கடல் மைல் எல்லைக்கு அப்பால், சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடற்பயண சிக்கல்களே பெரும்பாலான கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.
இந்த 47 கப்பல்களில் சுமார் 19 கப்பல்கள் ஈரானைச் சேர்ந்தவை என்றும், அவை நீண்டகாலமாக அந்தப் பிராந்தியத்தில் இயங்கி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த விஜித ஹேரத், இந்தக் கப்பல்கள் தொடர்பில் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், எந்தவித அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாது என்றும், தனது இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய அடையாளத்தைப் பாதுகாத்துக் கொண்டு முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மனிதாபிமான தேவைகளை பொறுப்புடன் கையாள்வதுடன், சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு அமைவாகவும் இலங்கை தனது நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு இலங்கை அரசாங்கம் எந்தவிதமான பொருட்களையோ அல்லது அத்தியாவசியப் பொருட்களையோ வழங்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
எனினும், தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் அத்தகைய கப்பல்களுக்கு பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கினால், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் தடைகள் குறித்து அறிந்து, உரிய கவனத்துடனும் சட்டப்பூர்வ பொறுப்புடனும் செயற்படுவது அவற்றின் பொறுப்பு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


Recent Comments