Thursday, November 5, 2026
Huisதாயகம்துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துங்கள் - சஜித் பகிரங்கச் சவால்

துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துங்கள் – சஜித் பகிரங்கச் சவால்

“தேசிய மக்கள் சக்தி அரசின் உறுப்பினர்களே, அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள். மக்கள் நலன்புரித் திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டதாலும் விலைவாசி உயர்வாலும் அங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதைப் போன்று, இங்கும் உங்களுக்குத் துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள். அப்போதுதான் நாட்டு மக்களின் உண்மையான நிலைப்பாடு தெரியவரும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

முன்பு மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரைத் தெய்வங்களாகக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியினர் (மாலிமா), இன்று ஆடம் ஸ்மித் போன்ற பொருளியலாளர்களைத் தெய்வங்களாகக் கொண்டு, இடது பக்கம் சிக்னல் போட்டுவிட்டு வலது பக்கமாகச் செல்லும் புதிய தாராளவாதத்தின் முதன்மைத் தந்தைகளாக மாறிப்போயுள்ளனர் என்றும் அவர் சாடினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“வறுமையை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, இன்றும் தவறான மற்றும் அறிவியல் அடிப்படையற்ற தரவுகளின் அடிப்படையில் ‘அஸ்வெசும’ திட்டத்தை நடைமுறைப் படுத்துகின்றது. வறுமை ஒழிப்புத் திட்டத்தில் நுகர்வு, உற்பத்தி, சேமிப்பு, முதலீடு, ஏற்றுமதி என அனைத்தும் இருக்க வேண்டும். ஆனால் அஸ்வெசும திட்டத்தில் நுகர்வு மட்டுமே காணப்படுகின்றது.

நாட்டின் வறுமைக் கோடு என்னவென்றே தெரியாமல் வரவு – செலவுத் திட்ட உரையை வாசிக்க அரசு தயாராகி வருகின்றது. நாட்டில் வறுமை 30% – 40% ஆகக் காணப்படும் வேளையில், 18–24 வயதுடைய இளைஞர்களிடையே மிக அதிகளவிலான வேலையின்மை நிலவுவது இலங்கையில்தான் எனச் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடுகின்றதே தவிர நாட்டைப் பற்றிச் சிந்திக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வரி வருமான இலக்குகளைக் குறிப்பிடும்போது, மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையைச் சுமத்தி அதனை அரசு மேலும் உயர்த்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் அளித்த பெற்றோல், டீசல் விலை குறைப்பு வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு, இன்று எரிபொருள் விலைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன.

மக்களின் பொருளாதார உரிமைகளை மீறிக் கொண்டே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதாகக் கூறி அடக்குமுறைச் சட்டங்களை அரசு கொண்டு வருகின்றது. அரசியல் ரீதியாகத் தமக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களை நசுக்கவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவுள்ளது.

அரசு ஜனநாயகத்தை அழித்து மக்களாணையைக் காட்டிக்கொடுத்து வருகின்றது. எரிபொருள் வில உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தையும் கூட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, தேசிய மக்கள் சக்தி அரசின் உறுப்பினர்களே, அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள். மக்கள் நலன்புரித் திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டதாலும் விலைவாசி உயர்வாலும் அங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதைப் போன்று, இங்கும் உங்களுக்குத் துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள். அப்போதுதான் நாட்டு மக்களின் உண்மையான நிலைப்பாடு தெரியவரும்.

இப்போதாவது வரிச்சுமைகளைக் குறைத்து மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதோடு, வேலையற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் 80 ஆயிரம் பட்டதாரிகளுக்கும், ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.” – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!