பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் என்பவற்றை அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
இந்த சட்டமூலம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு கடந்த 6ஆம் திகதி நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவினால் முதலாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 23 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் ஏற்கெனவே இருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை விட பாரதூரமானது என்று எதிரணியினரும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனடிப்படையிலேயே இந்த சட்டமூலத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதேபோன்றே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் அரசாங்கத்தினால் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த சட்டமூலமும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ள அம்சங்களை விட பயங்கரமான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகக் கூறும் அரசாங்கம், அதிலுள்ள விடயங்களை பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலத்திலும் உள்ளடக்கியுள்ளதாக சட்ட வல்லுநர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதனால்தான் இந்த இரண்டு சட்ட மூலங்களையும் அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அரசாங்கத்தின் அங்கமான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தை விட மிக மோசமான சட்டமூலம் என்று விபரித்திருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அதனை வாபஸ்பெற்று சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக திருத்தியமைக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இது குறித்து ஆணைக்குழுவானது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்காகக் கொண்ட சட்டமொன்றின் தேவைப்பாட்டை நாம் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, அத்தகைய சட்டங்கள் நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் இலங்கை ஏற்றுக் கொண்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனங்களுக்கு ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
அதற்கமைய தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனங்கள் என்பவற்றுக்கு முற்றிலும் முரணானவையாக அமைந்துள்ளன.
அத்தோடு, இச்சட்டமூலமானது 1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மிக மோசமானதாக அமையக் கூடும். இச்சட்டமூலமானது உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரத்துக்கும் குறையாத பொலிஸ் அதிகாரியிடம் அளிக்கப்படும் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்றுக் கொள்வதற்கு இடமளிப்பதுடன் இச்சட்டமூலத்தின் ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16ஆவது பிரிவை மீள நிறுவும் வகையில் அமைந்துள்ளது.
இத்தகைய செயற்பாடு நபர்களை சித்திரவதை செய்வதற்கும் மிக மோசமான நடத்தைகளுக்கு உட்படுத்துவதற்கும் வழிகோலும் என்பதை நினைவுகூர விரும்புகின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடுமையான குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை தடுத்து வைப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்கு இச்சட்டமூலம் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கிறது. அதுமாத்திரமன்றி இச்சட்ட மூலத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் ‘கடுமையான குற்றம்’ என்ற பதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் பரந்துபட்ட வரைவிலக்கணம் குறித்தும் நாம் தீவிர கரிசனையடைகிறோம்.
நபரொருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினரா என்பதை தீர்மானிப்பதில் இச்சட்டமூலம் இலங்கை பிரஜைகள் மீது மிகப் பரந்துபட்டதும் நியாயமற்றதுமான சந்தேகத்தை பிரயோகிக்கிறது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் பயங்கரமானது என்று எச்சரித்துள்ளதுடன் அதனை மறுசீரமைக்குமாறும் கோரியிருக்கின்றது.
உண்மையிலேயே இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது பக்கச்சார்பின்றி நடுநிலைமையாக நின்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தை கடுமையாக எதிர்த்துள்ளமை பாராட்டத்தக்க செயற்பாடாகும்.உண்மையிலேயே மனித உரிமைகளை மீறும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.
அதேபோன்றே பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமூலத்தின் சரத்துக்கள் தொடர்பிலும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆராய்ந்திருக்கின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்திலுள்ள விடயங்களை விடவும் அதிகபட்ச அடக்குமுறைகளை உள்ளடக்கிய விதத்தில் இந்த சட்டமூலம் அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.உரிமைகள் அறிக
உள்ளூரிலுள்ள பல்வேறு மனித உரிமைசார் அமைப்புகள் இந்த சட்டமூலத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. இதேபோன்றே சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவகையில் அமையவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றன.
பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் பாரதூரமான அம்சங்களை உள்ளடக்கியதாகவே புதிய சட்டமூலம் உள்ளதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த இரு சட்டமூலங்களையும் மீளப் பெறுவதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை அழைத்து இந்த சட்டமூலங்களிலுள்ள பாரதூரத்தன்மை தொடர்பில் எடுத்துக் கூறி அவற்றை மீளப் பெறுவதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டியதன் அவசியத்தை சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சுட்டிக் காட்டியிருந்தனர்.
இதற்கிணங்க கடந்த 25ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் என்பவற்றில் காணப்படும் பாரதூரமான தன்மை குறித்து இராஜதந்திரிகளுக்கு விளங்கப்படுத்திய எதிரணியினர் இந்த சட்டமூலங்களை மீளப் பெறுவதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.
இவ்வாறு இந்த இரு சட்டமூலங்களையும் அமுல்படுத்த விடாது தடுப்பதற்கு பெரும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. ஆனாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கங்கணம்கட்டி நிற்கின்றது. உண்மையிலேயே பயங்கரவாத தடைச்சட்டம் என்பது நீக்கப்பட வேண்டும்.
அதனை நீக்கவேண்டும் என்று எதிரணியில் அங்கம் வகித்த போது மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தி வந்தது. பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும் என்று கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்திய போது அந்தப் போராட்டங்களில் மாவட்டம் தோறும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
கடந்த கால அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முயன்ற போது அந்தச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி முழுமூச்சாக செயற்பட்டிருந்தது.
ஆனால், இன்று ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் விடுதலை முன்னணியை தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காது அந்த சட்டத்தை விட அடக்கு முறைகளைக் கொண்ட சட்ட மூலங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கின்றமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க செயற்பாடல்ல.
எனவே, இந்த சட்டமூலங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.


Recent Comments