Friday, November 6, 2026
Huisதாயகம்வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி வளங்குன்றிய நிலையில் உள்ளது - ரவிகரன் எம்.பி

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி வளங்குன்றிய நிலையில் உள்ளது – ரவிகரன் எம்.பி

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி ஆளணி மற்றும் பௌதிக வளப் பற்றாக்குறைகளுடன், பாடசாலைகளைவிடவும் வளங் குன்றிய நிலையில் இயங்கிவருவதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுவதற்கு முன்னர், கல்வியியல் கல்லூரிகளினது தற்போதைய வளங்கள், ஆளணி மற்றும் குறைபாடுகள் மதிப்பிடப்பட வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக் கழக பீடங்களாக மாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களால் 06.11.2026இன்று கொண்டு வரப்பட்ட பிரேரணையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!

கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுவதற்காகக் கௌரவ ஹேஷா விதானகே அவர்கள் கொண்டுவந்துள்ள இப்பிரேரணை, ஆசிரியர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அந்த நோக்கத்தை வரவேற்கிறோம்.

எனினும் இந்த மாற்றத்தைச் செயற்படுத்துவதற்கான வளங்கள், நிதி மற்றும் நிருவாக ஏற்பாடுகள் குறித்து பார்வையும் சமநேரத்தில் நோக்க வேண்டியதாகிறது.

ஆசிரியர் கல்வியில் தரம் உயர்வதை நாங்கள் விரும்புகின்றோம். அந்த உயர்வு பெயர்ப்பலகையில் மட்டுமன்றி விரிவுரை மண்டகத்திலும் ஆய்வுகூடங்களிலும் பயிற்சி வகுப்பறையிலும் பிரதிபலிக்க வேண்டும்.

இப்போது கல்வியியல் கல்லூரியாக இயங்கும் வவுனியா கல்வியியல் கல்லூரி மிகுந்த வளக்குறைபாட்டுடன் இயங்குகிறது.

கடந்த 2025.10.18 அன்று குறித்த கல்வியியல் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று ஆளணி வளத்திலும் பௌதிக வளத்திலும் மிகுந்த பற்றாக்குறையோடு இயங்குவதை பார்வையிட்டு உறுதிப்படுத்தியிருந்தோம்.

60% இயங்குநிலை கல்வி சார் ஆளணியோடும் 38%கல்வி சாரா ஆளணியோடும் நாளாந்த நிருவாக மற்றும் கலைத்திட்ட நடைமுறைகளை வினைத்திறனாக கொண்டு செல்வதில் அந்த நிறுவனம் இடர்படுவதை அவதானிக்க முடிந்தது.

சீரான மலசலகூட வசதியின்மை, விஞ்ஞான ஆய்வுகூட வசதிப் பற்றாக்குறை, நூலக வசதிப் பற்றாக்குறை, விடுதிப் பற்றாக்குறை, கல்வியியல் கல்லூரிகளின் கட்டடங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நிலை, வடிகாலமைப்புச் சீரின்மை, மின்விளக்குப் பற்றாக்குறை, வகுப்பறைகளில் நவீன கற்றல் கருவிகளின் பற்றாக்குறை, உள்ளக வீதிகள் சீரின்மை, பாதுகாப்பற்ற மின்சாரக் கட்டமைப்பு என பல்வேறு குறைபாடுகளுடன் வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு கல்வியியல் கல்லூரியான வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி இயங்கி வந்தது.

ஆசிரியர்களை உருவாக்குகின்ற அந்த நிறுவனத்தை விடவும் சில பாடசாலைகள் சிறந்த வளங்களைக் கொண்டுள்ள நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், அதனைப் பல்கலைக்கழக பீடமாக மாற்றிவிட்டு, அதற்குரிய வளங்களை ஒதுக்காவிட்டால் உயர்த்தப்பட்ட அந்தஸ்துக்கும் உண்மையான வசதிகளுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துவிடும்.

ஆகவே முதலில் ஒவ்வொரு கல்வியியல் கல்லூரியினதும் தற்போதைய வளங்கள், ஆளணி மற்றும் குறைபாடுகள் மதிப்பிடப்படவேண்டும்.

பட்டப்படிப்பை நடத்துவதற்கு தேவையான தகுதியான விரிவுரையாளர்கள், நூலகங்கள், ஆய்வு கூடங்கள், கணினிகள், இணைய வசதிகள் மற்றும் விடுதி வசதிகள் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கட்டுமானங்களுக்கான நிதியுடன் அவற்றின் பராமரிப்புக்கும் தொடர்ச்சியான கல்விச் செயற்பாடுகளுக்கும் போதிய வருடாந்த நிதி ஒதுக்கப்படவேண்டும்.

எனவே நிறுவனங்களின் வளத் தயார் நிலையை மதிப்பிட்டு, குறைபாடுகளைப் பூர்த்தி செய்து உரிய தரநிலைகளுடன் இந்த மாற்றம் முன்னெடுக்கப்படவேண்டும் என இப்பேரவை ஊடாக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!