அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, குறித்த ஐந்து பிக்குகளையும் எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் இன்று (09) அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
அனுராதபுரம் புனித நகரத்துக்கான புதிய திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் இந்த சத்தியாக் கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் பலாங்கொட கஸ்ஸப தேரர், கஹதாகஸ்திகிலியே விஜித தேரர், பலாங்கொட அனுருத்த தேரர், பிலிமதலாவ ரேவத தேரர் மற்றும் தெனியாயே சொரத தேரர் ஆகியோருக்கே நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
போராட்ட இடத்தில் பிக்குகள் தங்கியிருப்பதைத் தடைசெய்து முன்னதாக பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை இரத்து செய்யக் கோரி, பிக்குகள் தரப்பு சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனு இன்று (09) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments