Sunday, November 15, 2026
Huisதாயகம்முன்னுரிமை அடிப்படையில் தகவல் தொழினுட்ப மற்றும் தொலைக் கல்வி நிலையங்களை நிறுவுக..!

முன்னுரிமை அடிப்படையில் தகவல் தொழினுட்ப மற்றும் தொலைக் கல்வி நிலையங்களை நிறுவுக..!

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84 சதவீதமான கணினிகளும் 82.76 சதவீதமான பல்லூடக எறிவைகளும் செயலிழந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இதுவரை ஒரு கணினி வள நிலையம் கூட இயங்காத முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தகவல் தொழினுட்ப மற்றும் தொலைக்கல்வி நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

பாராளுமன்றில் 14.11.2026இன்று 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஒட்டுமொத்த அரச கட்டுமானத்தின் அறிவுறுத்தல்களையும் புறந்தள்ளி மகாவலி அதிகார சபை தன்னிச்சையாக தனியார் காணியில் உப்பளம் அமைக்கும் அதே கொக்குத்தொடுவாயில் தான், சிங்கள வயல்வெளிகளுக்கு பாதுகாப்பாக தமிழர் வயற்காணிகளை ஊடறுத்து யானை வேலி அமைக்கும் அதே கொக்குத்தொடுவாயில் தான், தமிழர் பயிலும் உயர்தரப் பாடசாலை கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் ஒற்றை இயங்குநிலை கணினி கூட இல்லாதுள்ளது.

தமிழர் வாழும் எல்லையோரக்கிராமங்களின் இலட்சணத்தை இலங்கை அரசு இவ்வாறு தான் வரையறுக்கிறதா! பாடசாலைகளில் தகவல் தொழினுட்ப உட்கட்டமைப்புகளுக்கும் இணைய வசதிகளை ஏற்படுத்துவதற்கும் 4 பில்லியன் ரூபாய் 2027இல் ஒதுக்கப்படுவதாக அறிகிறோம்.

ஒவ்வொரு பாடசாலையிலும் நிருவாக நடவடிக்கைகக்கும் கலைத் திட்ட முன்னெடுப்புக்கும் குறைந்தது ஒவ்வொரு கணினியேனும் இயங்குநிலையில் காணப்படுவதையும் பாடசாலைகளில் இலத்திரனியல் சாதனத் திருத்தங்களுக்கு, குறிப்பாக பல்லூடக எறிவைகள், திறன்தளங்களைத் திருத்துவதற்கு முறையான திருத்தப் பொறிமுறை ஒன்று காணப்படுவதையும் கௌரவ கல்வி அமைச்சர் 2027இல் உறுதிப்படுத்துவாரா!

கல்வி வலய மட்டத்தில் இயங்கும் தகவல் தொழினுட்ப மற்றும் தொலைக்கல்வி நிலையங்கள், வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களில் இதுவரை அமைக்கப்படவில்லை.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84 சதவீதமான கணினிகளும் 82.76 சதவீதமான பல்லூடக எறிவைகளும் செயலிழந்துள்ளன. இந்தப் புள்ளிவிபரங்கள், வடமாகாணத்தின் ஏனைய 12 கல்வி வலயங்களுடன் ஒப்பிடுகையில் முல்லைத்தீவு கல்வி வலயத்தின் கடுமையான பின்னடைவைக் காட்டுகின்றன.

வலயத்தில் ஒரு கணினி வள நிலையம் இயங்கினால், பாடசாலைகளின் கணினிகளையும் ஏனைய உபகரணங்களையும் முறையாகப் பராமரித்து பழுதுபார்ப்பதற்கு அது தொழினுட்ப உதவியை வழங்கும். ஆசிரியர்களுக்கும் கல்வி சார்ந்த ஏனைய பணியாளர்களுக்கும் தகவல் தொழினுட்ப பயிற்சியைத் தொடர்ச்சியாக வழங்க முடியும்.

இது தொடர்பான எமது வாய்மூல விடைக்கான வினாவுக்கு 2026.10.06 அன்று பதிலளித்த கௌரவ பிரதமர் அவர்கள், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்படும் ஐந்தாண்டுக் கருத்திட்டத்தின் ஊடாக இந்நிலையங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இதுவரை கணினி வள நிலையம் கூட இயங்காத முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்கள் இரண்டையும் இக்கருத்திட்டத்தின் முதற்கட்டத்தில் உள்வாங்கி, 2027ஆம் ஆண்டிலேயே தகவல் தொழினுட்ப மற்றம் தொலைக்கல்வி நிலையங்களை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமரைக் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!