Saturday, November 14, 2026
Huisதாயகம்நாட்டின் இனப் பிரச்சினையை மூடிமறைக்கும் அரசின் கொள்கைப் பிரகடனமே இந்த பாதீடு..!

நாட்டின் இனப் பிரச்சினையை மூடிமறைக்கும் அரசின் கொள்கைப் பிரகடனமே இந்த பாதீடு..!

மாகாணசபைத் தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கப்படாததன் மூலம் அடுத்த வருடம் தேர்தல் நடாத்தப்பட மாட்டாது என்ற விடயம் உறுதியாகி இருப்பதாகவும், குடியேற்றத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீட்டின் ஊடாக எமது மக்களின் நிலங்கள் கபளீகரம் செய்யப்படக் கூடிய அச்சுறுத்தல் எழுந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தேசிய இனப் பிரச்சினையொன்று உண்டு என்பதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லாத அரசாங்கத்தின் ஒரு கொள்கைப் பிரடகனமாகவே அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் அமைந்திருப்பதாகக் கரிசனை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட உள்ளடக்கத்தின் திருப்திகரமான தன்மை குறித்து வினவியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு கரிசனை வெளியிட்டார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் எமது அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கக்கூடிய சில விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

முதலாவதாக கடந்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கான நிதி ஒதுக்கீடு என்ற விடயம் உள்வாங்கப்பட்டது. ஆனால் இம்முறை வரவு, செலவுத் திட்டத்தில் மாகாணசபைத் தேர்தல்களுக்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. எனவே அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்பட மாட்டாது.

இனப்பிரச்சினைக்கான முறையான அரசியல் தீர்வு எட்டப்படும் வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாகாணசபை முறைமையைத் தொடர்ந்து பேணுவோம் என்பதே அரசாங்கத்தின் வாக்குறுதியாகும்.

யாழ்ப்பாணத்தில் எமது கட்சி உறுப்பினர்களைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்திலும் மாகாண சபைகள் தற்போதுள்ள அதே வடிவத்தில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றே ஜனாதிபதி கூறினார்.

ஆனால் இப்போது வடக்கில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்திய சாலைகளை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதாக வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாகப் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இது எமது அடிப்படைக் கொள்கைக்கு எதிரான மிகமோசமான ஒரு நகர்வாகும்.

அடுத்ததாக கிவுல் ஓயா திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் நாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததை அடுத்து, அத்திட்டம் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது அத்திட்டத்துக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோன்று கீழ் மல்வத்து ஓயா திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் குடியேற்றத்தத் திட்டங்களுடன் சம்பந்தப்பட்டவை என்பதனால், எமது மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இவை தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அதேபோன்று அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான தீர்வு என்பன பற்றி வரவு, செலவுத் திட்டத்தில் ஒரு வார்த்தை கூட உள்வாங்கப்படவில்லை.

அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டமாக இருந்தாலுமே, அது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமாகும். எனவே தமிழ்த் தேசியப் பிரச்சினையொன்று உண்டு என்பதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லாத அரசாங்கத்தின் ஒரு கொள்கைப் பிரடகனமாகவே நாம் இந்த வரவு, செலவுத் திட்டத்தைப் பார்க்கிறோம் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!