அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் கிளம்புகின்றன என்பதை தற்போதைய அரசாங்கம் என்றாவது ஒருநாள் புரிந்து கொள்ளும் என்று சுட்டிக்காட்டிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ், ‘நீதித் துறையுடன் யாரும் விளையாடக் கூடாது’என வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் ‘எங்கள் இறையாண்மையை பாதுகாப்போம்’ (Save our sovereignty – SOS) என்ற சுயாதீன அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே பீரிஸ் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

உண்மைச் சம்பவமொன்றை உதாரணமாகச் சுட்டிக்காட்டிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கவிற்கு எதிராக விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ‘தான் நியமித்த நீதிபதிகளே தனக்கெதிராக விசாரணை நடத்துவதாக’ அவர் ஒரு சிரேஷ்ட சட்டத்தரணியிடம் கூறியுள்ளார். அதற்கு அச்சட்டத்தரணி, ‘மேடம், அதனால் தான் நீதித்துறையுடன் யாரும் விளையாடக் கூடாது என்று சொல்வார்கள்’ என பதிலளித்துள்ளார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், சட்டத்துறையைச் சேர்ந்த பெரும்பாலானோர் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராகவே உள்ளதாக தெரிவித்த அவர்,
“இந்தச் சட்டமூலத்தை வேண்டி ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தும் சில சட்டத்தரணிகள், பகிரங்கமாக அதை வரவேற்பதாகக் கூறினாலும், தனிப்பட்ட முறையில் அதற்கு எதிராகவே இருப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், 22வது திருத்தச் சட்டமூலத்தை அமைதியாக எதிர்க்கும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.


Recent Comments