ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதி அனுர பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமால் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இன்று (22) குளியாப்பிட்டியவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
ஊழலை எதிர்த்துப் போராடுவது குறித்து ஜனாதிபதி தொடர்ந்து பேசி வருவதாகவும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் அந்த அர்ப்பணிப்பை நிரூபிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

“திருடர்களைப் பிடிப்பது மற்றும் நேர்மையை உறுதி செய்வது குறித்து ஜனாதிபதி பேசுகிறார். அந்த அர்ப்பணிப்பை நிரூபிக்க இதுவொரு நல்ல வாய்ப்பு. ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் முன்னேற்றம் குறித்தும் நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டார்.
நெல் விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அரிசி விலை அதிகமாக இருப்பதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர்,
பொதுமக்கள் மீதான வரிச்சுமை மற்றும் மின்சாரம், எரிபொருள் கட்டண உயர்வு குறித்தும் கவலை வெளியிட்ட அவர், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வர்த்தகர்கள், குறிப்பாக இளம் தொழில்முனைவோர்கள் தொழில்களை முன்னெடுத்துச் செல்வது கடினமாக உள்ளதாகக் கூறினார்.

அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் இணையவழிச் சம்பவங்கள் (cyber incidents) குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண வேண்டும்.
அரசாங்கம் அரசியல் மோதல்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு விவசாயிகள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மக்கள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வையே எதிர்பார்க்கிறார்களே தவிர, மேலும் அரசியல் முரண்பாடுகளை அல்ல,” என்றார்.
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் தொடர்பாக எழுந்த சம்பவங்களுக்கு எதிர்க்கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டையும் நாமல் ராஜபக்ஷ நிராகரித்தார். துறைமுக நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு இல்லை என்றும், தவறுகள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் விசாரித்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Recent Comments