ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப் போர் மூண்ட நாட்களில் நடந்த மிகப் பெரிய மனித உரிமை மீறல் ஒன்றாக அருட்தந்தை ஜிம்பிரவுண் அடிகளார் காணாமல் போகச் செய்யப்பட்டார்.
ஜிம் பிறவுண் அடிகளார் படுகொலை
அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டிருந்த அருட்திரு ஜிம் பிறவுண் அடிகளார் தனது உதவியாளருடன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 20 2006 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போகச் செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு அல்லைப்பிட்டி சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணிக்கு அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும் தம்மிடம் உள்ளதாக பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தெரிவித்தனர்.
அதன்பின் அவர் பற்றிய தகவல்கள் தொடர்புடையவர்களுக்கு கிடைக்கவில்லை. இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டபோதும் தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர். அவர்கள் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் பங்குத்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார். பங்குத்தந்தையுடன் சென்ற அவரது உதவியாளர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் வின்சன் விமலதாஸ் (வயது 39).
அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர்.
பலவித அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிறவுண் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கடற்படை அதிகாரிகளிடம் மன்றாடிய அருட்தந்தை
அல்லைப்பிட்டி கிராமத்தைப் பொறுத்தவரையில் ஆகஸ்ட் மாதம் துன்பங்கள் நிறைந்த ஒரு மாதமாக இருந்து வந்துள்ளது.
போரிலிருந்து தப்பி, உள்ளூர் கத்தோலிக்க தேவாலயத்திற்கு தஞ்சம் கோரி வந்திருந்த சிவிலியன்களை ஆகஸ்ட் 12ஆம் திகதி இரவு அருட்தந்தை பிறவுண் வரவேற்றிருந்தார்.
ஆனால், இந்த தேவாலயமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், தேவாலய வளவுக்குள் 36 பேர் கொல்லப்பட்டார்கள். மேலும், பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என அருட்தந்தை பிறவுண் கடற்படை அதிகாரிகளிடம் மன்றாடி கேட்டுக்கொண்டிருந்தார்.
முன்னர் மே மாதத்தில் இக்கிராமத்தில் நான்கு மாதக் குழந்தை மற்றும் நான்கு வயதுடைய பிள்ளை உட்பட ஒன்பது சிவிலியன்கள் கொல்லப்பட்டிருந்தமை இந்த இடத்தில் நினைவு கொள்ளப்பட வேண்டியதே
பெருமளவுக்கு இராணுவமயமாக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்டத்திலும், நாட்டின் ஏனைய பாகங்களிலும் பெருந்தொகையான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படும் சம்பவங்களுக்கு இரையாகி வந்த ஒரு காலப் பிரிவாக அது இருந்து வந்தது என்பது உண்மையே

அது இவ்வாறு இருக்க அருட்தந்தை ஜிம் பிறவுண் அவர்களை விரைவில் கண்டுபிடித்து தருமாறு வத்திக்கான் வேண்டுகோள் விடுத்தது. பேராயர் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்துமாறு ஆம்னஸ்டி இன்டர்நஷனல் அமைப்பு கோரியது.
அல்லைப்பிட்டிற்கு சென்ற சமயம் காணாமற்போன பங்குத் தந்தை ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் உடன் பதில் தரவேண்டுமென பாப்பரசரின் இலங்கைக்கான தூதுவர் பேராயர் மரியோ செனாறி வேண்டுகோள் விடுத்திருந்தார். இத்தனையும் அவர்கள் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று
கத்தோலிக் குருமார்கள் அச்சப்பட்ட காலம்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார் என சந்தேகிக்கப்படும் பங்குத் தந்தை நிகால் ஜிம் பிறவுன் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா யாழ் கிறிஸ்தவ குருமார் அச்சம் தெரிவித்திருந்தனர்.
கடந்த 2006 ஓகஸ்ட் மாதம் தீவகம் அல்லைப்பிட்டி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கைதான 34 அகவையுடைய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரின் உதவியாளரான 38 அகவையுடைய வின்செண்ட் விமலதாஸ் ஆகியோர் விசாரணைக்கு எனக் கைதான பின் காணாமல் போயுள்ளார் என்பதே உண்மை ,
படுகொலைகள் இடம்பெற்ற பிரதேசங்களில் இருந்து உண்மைகளை வெளிக் கொணர்ந்த மத குருமார்களும் அரசின் பசிக்கு இரையாக தவறவில்லை என்பதே உண்மை
இந்த நிலையில் மண் சாக்குமூடை ஒன்றில் வெட்டப்பட்ட நிலையில் பொதி செய்யப்பட்ட நிலையில் புங்குடுதீவு கடற்கரையில் அன்றைய 8 மாதங்களின் பின்னர் மீட்கப்பட்ட சடலம் ஜிம் பிறவுண் அடிகளாருடையது என கத்தோலிக்க குருமார் அச்சம் வெளியிட்டிருந்தனர்.
குறித்த சடலத்தின் குருதியை கொழும்புக்கு அனுப்பி மரபணு முறைக்கு உட்படுத்துமாறு யாழ் கிறிஸ்தவ குருமார் யாழ் நீதிமன்றத்திடம் வலியுறுத்தினர்.
பன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையின் படி, பிறவுண் அடிகளும், உதவியாளர் விமலதாஸ் என்பவரும் விசையுந்து ஒன்றில் அல்லைப்பிட்டி நோக்கிப் பயணிக்கும் போது அவர்களின் நண்பர் ஒருவரை வழியில் சந்தித்து அவருடன் அல்லைப்பிட்டி கடற்படை சோதனைச் சாவடிக்குச் சென்றிருக்கின்றனர்.
பிற்பகல் 2.00 மணிக்கு அவர்கள் இருவரையும் சோதனைச் சாவடியில் விட்டு விட்டு நண்பர் சென்று விட்டார்.
சோதனைச் சாவடியில் இருந்து அருட்தந்தை மற்றும உதவியாள் இருவரும் விசையுந்தில் அல்லைப்பிட்டி நோக்கி சென்றதை சிலர் நேரில் கண்டுள்ளனர்.
அவர்களின் விசையுந்தின் பின்னால் சோதனைச் சாவடியில் இருந்து வேறு இரண்டு விசையுந்துகளில் ஒவ்வொன்றிலும் மூன்று ஆயுதம் தரித்தவர்கள் சென்றதையும் அவர்கள் கண்டுள்ளனர்.
இந்த ஆறு ஆயுததாரிகளும் அல்லைப்பிட்டியின் புனித மேரி தேவாலயத்தின் முன்னால் சிறிது நேரம் உரையாடி விட்டு மூவர் சோதனைச்சாவடியை நோக்கித் திரும்பி வந்துள்ளனர்.
நேரில் கண்ட சாட்சியாளர் மீண்டும் அல்லைப்பிட்டி சோதனைச் சாவடிக்குத் திரும்பியபோது அந்த மூன்று ஆயுததாரிகளும் இலங்கைக் கடற்படையினருடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவர் கவனித்தார்.
இந்நிகழ்வுக்குப் பின்னர் ஜிம் பிறவுண் அடிகளாரும் உதவியாளர் விமலதாஸூம் எங்கும் காணப்படவில்லை.
யாழ்ப்பாணக் குடாநாடு எங்கணும் உள்ள தேவாலயங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு தேடப்பட்ட போதும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இருவரும் கைது செய்யப்பட்டதை இலங்கைக் கடற்படையின் அதிகாரி அட்மிரல் உப்பாலி ரணவீர மறுத்திருந்தார்.
ஜிம் பிறவுணும் உதவியாளரும் மீண்டும் சோதனை சாவடிக்கு வந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றதாக சோதனைச் சாவடியில் இருந்த கடற்படையினர் தெரிவித்தனர்.
ஆனாலும், யாழ் நகருக்குள் இவரகள் இருவரும் வந்திருந்ததை யாப்பாணக் காவல் துறையினரால் உறுதிப்படுத்த முடியவில்லை. புங்குடுதீவுக் கடற்கரையில் மிகவும் அழுகிய நிலையில் மனித உடல் ஒன்றிருந்த மணற்பை ஒன்று 2007, மார்ச் 14 ஆம் நாளன்று கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர்ப் பத்திரிகை தகவல் வெளியிட்டிருந்தது.
இவ்வுடல் ஜிம் பிறவுணுடையதென அடையாளம் காணப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்திருந்தது. ஆனாலும், இவ்வுடலின் மீது மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனைகள் இந்த உடல் ஜிம் பிறவுணுடையதோ அல்லது விமலதாசின் உடையதோ அல்ல என இலங்கை அரசு அறிவித்தது
இடம்பெயர்ந்து அல்லல் பட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு அல்லைப்பிட்டி , ஊர்காவற் துறை என்று ஓடி ஓடி உதவிக்கொண்டிருந்த அல்லைப்பிட்டி கத்தோலிக்க பங்குத் தந்தை வணக்கத்திற்குரிய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் ( வயது 34 ) எனும் நல் உள்ளத்தினையும் அல்லைப்பிட்டி சோதனை சாவடியில் வைத்து கடற்படையினரும் , உள்ளூர் ஆயுத குழுவினரும் இணைந்து கடத்தி கொன்றதாக ஊடகங்கள் ஆதாரத்துடன் தகவல்கள் வெளியிட்டிருந்தன .
சில நாட்களின் பின்னர் தலையற்ற முண்டமாக ஜிம் பிறவுண் அடிகளாரின் வித்துடல் என நம்பப்பட்டு கடற்கரையில் மீட்கப்பட்டிருந்தது
இப்படுகொலைகள் தொடர்பாக ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிபதி சிறீநிதி நந்தசேகரன் ( பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி ) விசாரணைகளை முன்னெடுத்திருந்த போதும் கடற்படை , உள்ளூர் ஆயுத குழுவின் கொலை மிரட்டல்கள் காரணமாக பொதுமக்கள் சாட்சியமளிக்க முன்வரவில்லையென்று ஊடகங்கள் , பொதுமக்கள் தரப்பினர் குறிப்பிட்டிருந்தனர்
அருட் தந்தை பிறவுண் கடைசியாக காணப்பட்ட கடற்படை சோதனைச் சாவடியின் பதிவேட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு பதில் நீதவான் நீதிமன்ற நீதவான் கட்டளையிட்டிருந்த போதிலும், அப்பதிவேட்டை கையளிப்பதற்கு கடற்படையினர் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
காலப்போக்கில் அருட்தந்தை ஜிம்பிறவுண் அடிகளார் போலவே அவரின் வழக்கும் காணாமல் போனது
அருட்தந்தை ஜிம் பிரவுன் காணாமல் போனது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரனுக்கு ஆகஸ்ட் 23 அன்று பணியிட மாற்றம் ஏற்பட்டது. நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) அவரை கேட்ஸ் பதில் நீதவான் பதவியிலிருந்து நீக்கியது.
யாழ்ப்பாண மேலதிக நீதவான் பதவிக்கு திரும்புமாறும், கேட்ஸ் நீதிமன்ற அதிகார வரம்புக்குள் வரும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் அவர் கொழும்பு சிறுவர் நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் சரத் நந்த சில்வா இலங்கை பிரதம நீதியரசராக இருந்தார்.
நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் மீதான இந்த நடவடிக்கை, அருட்தந்தை ஜிம் பிரவுன் காணாமற் போனதன் உண்மையை கண்டறியும் முயற்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.


Recent Comments