Sunday, August 23, 2026
Huisவரலாற்றுத் தடம்மெளனிக்கப்பட்ட வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்..!

மெளனிக்கப்பட்ட வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்..!

வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் எங்கோ ஒரு மூலையிலாவது இவரைப்பற்றி பேசிக் கொண்டோ சிந்தித்துக் கொண்டோ இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரியளவில் பேசப்பட்டுக் கவனயீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய அடிகளாரின் விடயம் பத்தோடு பதினொன்றாக சிறிதளவே பேசப்பட்டு வந்துள்ளது.

ஆனால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்துக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தார் அடிகளார்.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னர் முழுநேரமாக தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் தமிழர் பகுதியில் நிழல் அரசாட்சியை நடத்திக் கொண்டிருந்த புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட ‘கல்வி மேம்பாட்டுப் பேரவை’யின் தலைவராகப் பொறுப்பேற்று இறுதிவரை அவ்வமைப்பு மூலம் அரும்பணிகள் ஆற்றிவந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து போராட்டத் தலைமை வன்னிக்குப் பெயர்ந்த பின்னர் அடிகளாரின் பணி முழுமையாக வன்னியில் மிளிரத் தொடங்கியது. அவரது ஒவ்வொரு வினாடியும் எவ்வாறு தமிழ்ச் சமூகத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது என்பதிலேயே கழிந்தது. எந்நேரமும் அது குறித்தே சிந்தித்துக் கொண்டும் செயலாற்றிக் கொண்டும் இருந்தார். குறிப்பாக ஆங்கில மொழியறிவை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார்.

இயல்பிலேயே ஆங்கில மொழிவல்லமை கொண்டிருந்தமையும், நீண்டகால ஆசிரியத் தொழில் அனுபவமும், யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய கல்லூரிகளுள் ஒன்றான புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய பெரு அனுபவமும் கொண்டிருந்தமையால் அவரால் தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் மிகத்திறம்படச் செய்ய முடிந்தது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர் தனது நீண்டநாட் கனவான ஆங்கிலக் கல்லூரியை நிறுவும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.

2004 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் திறக்கப்பட்ட ஆங்கிலக் கல்லூரியில் இவரே பொறுப்பாகவிருந்து அக்கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருந்தார். தமிழ் இளையோரிடையே ஆங்கில மொழியறிவை விருத்தி செய்யவென்ற கனவோடு இயங்கிய இவரது உழைப்பு மிகப்பெரிய மாற்றத்தை வன்னியின் இளஞ்சமுதாயத்தில் தோற்றுவித்தது. இறுதிவரை அக்கல்லூரியையும் கல்வி மேம்பாட்டுப் பேரவையையும் பொறுப்பாக நடத்தி வந்தார்.

அடிகளாரின் உழைப்பு அபரிதமானது. ஆங்கிலக் கல்லூரியில் தானே முழு நேரமாக ஆசிரியராகப் பணியாற்றியதோடு நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அதேநேரம் கல்வி மேம்பாட்டுப் பேரவைக்கான பணியையும் செய்துவந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள், பொறுப்பாளர்களுக்கான ஆங்கிலக் கல்வி புகட்டலையும் தனக்குக் கிடைக்கும் மிகச்சிறு ஓய்வுநேரத்தில் செய்து வந்தார். அடிகளாரை அறிந்த எவருக்குமே அவரின் கல்விபுகட்டல் மீதான அதீத ஈடுபாடும் அதற்கான அவரின் உழைப்பும் வியப்பை ஏற்படுத்தும்.

இவ்வளவு வேலைப்பழுவிற்குள்ளும் கத்தோலிக்க மதகுருவாக தனது பணிகளையும் செய்து வந்தார். கிளிநொச்சி அம்பாள்குளம் பங்கில் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் உட்பட மதகுருவாக தனது பங்கையும் ஆற்றிவந்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின்பால் இவருக்கிருந்த அக்கறை அதீதமானது. எமது மக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்றி அடிகளாரின் உடல்நிலை அவ்வளவு தூரம் சுமுகமானதாக இருக்கவில்லை. அவசரமாக சில சத்திர சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில் அவரது உடல்நிலை இருந்த போது, அவரை சற்று ஓய்வெடுத்து மருத்துவத்தைக் கவனிக்கும்படி பலர் வற்புறுத்தினார்கள்.

தேசியத் தலைவரே அவரிடம் யாழ் சென்று மருத்துவத்தைக் கவனித்து விட்டு பின்னர் வன்னிக்கு வந்து பணியாற்றும்படி வேண்டுகோள் விடுத்தும்கூட அடிகளார் தனக்கான ஓய்வை எடுத்துக் கொள்ளவில்லை. தான் யாழ்ப்பாணம் போனால் திரும்பிவர முடியாநிலை ஏற்படலாம், அதனால் எல்லாப் பணிகளும் பாதிப்படையும் என்பதோடு தன்னால் தேவையேற்படும் இடத்தில் பணிபுரிய முடியாமற் போகுமென்ற காரணத்தைச் சொல்லி இறுதி வரை அவர் வன்னியை விட்டு வெளியேறாமலேயே இருந்தார்.

கத்தோலிக்கத் தலைமைப்பீடம் அவரை அழைத்த போதுகூட, தான் வெளியேறினால் திரும்பவும் வன்னிக்கு வரமுடியாத நிலையேற்படலாம் என்பதால் இறுதிவரை வன்னிக்குள்ளேயே பிடிவாதமாக இருந்து மக்களுக்காகப் பணியாற்றிய ஓர் உத்தமர்தான் வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்.

வன்னியில் போர் தீவிரமடைந்த போது மக்களோடு மக்களாகவே அடிகளாரும் தனது கல்லூரியினதும், கல்வி மேம்பாட்டுப் பேரவையினதும் ஆவணங்களோடு ஒவ்வோரிடமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்.

போரின் உச்சக்கட்டத்தில் நிலைமை படுமோசமாகப் போய்க் கொண்டிருக்கும் போது அடிகளாரை படகு வழியாக பாதுகாப்பாக அனுப்புவதென முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அடிகளாரைப் புறப்படச் சொன்ன போது மிகக் கடுமையாக அதை எதிர்த்து, எனது மக்களோடேயே தான் நான் இருப்பேன் என்று பிடிவாதமாக நின்றுகொண்டவர். எழுபத்தைந்து வயதிலும் வலுவாகவும் இயல்பாகவும் அந்தக் கடைசிநேரக் கோரத்தை தான் நேசித்த மக்களோடேயே இருந்து எதிர்கொண்டவர்.

இறுதிக்கணம் வரை மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்தார் அடிகளார். வலைஞர்மடத்தில் தங்கியிருந்து பின்னர் முள்ளிவாய்க்காலில் இறுதியாக இருந்தது வரை தனது ஆவணங்களையும் காவியபடியே மக்களோடு மக்களாக அவர் இருந்து பணியாற்றினார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதி நாட்களில் எல்லோரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது அடிகளாரும் மக்களோடுதான் வந்திருந்தார். மே மாதம் 17ம் நாள் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வெட்டையிலே மக்களோடுதான் அடிகளார் இருந்தார்.

மே மாதம் 18ம் நாள் காலையில், புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தம்மை அடையாளப்படுத்தி இராணுவத்தினரிடம் சரணடையச் செல்வதென்ற முடிவெடுத்த போது தனது ஆங்கிலமொழி வல்லமை அவ்விடத்தில் தேவைப்படுமென்பதால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் அந்தச் சரணடைவை சுமுகமாக நிகழ்த்தும் விதத்தில் அவரே முன்னின்று செயற்பட்டார்.

தனது ஒவ்வொரு வினாடியையும் தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காவே செலவழித்து உழைத்து ஓடாய்த் தேய்ந்த அடிகளார் ‘குறிப்பாக ஆங்கிலக் கல்வி மேம்பாட்டிற்காக உழைத்த அடிகளார்’ இறுதிச் சரணடைவிலும் தனது ஆங்கில வல்லமையின் உதவி தேவைப்படுவதை உணர்ந்து அந்தத் தள்ளாத வயதிலும் தானே முன்வந்து செயலில் இறங்கிய எமது அடிகளார் இன்று காணாமற் போனோர் பட்டியலிலே இணைக்கப்பட்டிருக்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!