பதுளை போதனா மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட விசேட வைத்தியர் ஒருவரின் சடலம், இன்று (24) மஹியங்கனை, மாபாக்கடவெல பகுதியில் உள்ள பாறை ஒன்றின் மீதிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மயக்கவியல் விசேட வைத்தியரான இவர், நேற்று (23) காலை மருத்துவமனையில் கடமைக்குச் சமூகமளித்த பின்னர், அன்றைய தினத்தின் பிற்பகுதியில் காணாமல் போயிருந்தார்.

சசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸ் விசாரணைகளில், வைத்தியரின் காரானது மீகஹகியூல ஊடாக மஹியங்கனையை நோக்கிப் பயணித்துள்ளமை தெரியவந்தது.
பின்னர் அந்த வாகனம் நேற்றிரவு மாபாக்கடவௌ பகுதியில் உள்ள பதுளை – மஹியங்கனை கால்வாய் வீதியின் 17 ஆம் கட்டை மைல்கல் பகுதிக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இன்று காலை மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போதே வைத்தியரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recent Comments