டிஜிட்டல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாட்டு எளிமை காரணமாக, புதிய தலைமுறையினரிடம் விமர்சனப் பகுப்பாய்வு சிந்தனை (critical-thinking) தொடர்ந்து குறைந்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ள சமூக-அரசியல் விமர்சகர் விபுல கருணாதிலக்க, தேர்தல்களை இலக்காகக் கொள்ளாத அல்லது ஆட்சி மாற்றங்களுடன் மாறாத, அறிவியல் ரீதியிலான நிலையான தேசியக் கொள்கையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
‘கேரேஜ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் சனுக கருணாரத்ன வழங்கும் ‘டிவி சுப்ரீம்’ (TV Supreme) அலைவரிசையின் ‘மச்சான்’ அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஆகஸ்ட் 26 அன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
டிஜிட்டல் யுகத்தின் வேகம்
முந்தைய தலைமுறையினர் ஆவண ஆதாரங்களைப் பயன்படுத்தித் தங்களது அறிவை சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பிய நிலையில், ‘ஜென் ஜி’ (Gen Z) தலைமுறையினர் குறுகிய காலத்திற்குள் அறிவைப் பெற டிஜிட்டல் புகைப்படங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கிறார்கள் என்று அவர் அவதானித்தார்.

அந்த வேகம் அவர்களின் விமர்சனப் பகுப்பாய்வு சிந்தனைத் திறனைப் பலவீனப் படுத்துவதோடு, அவர்களின் பொறுமையையும் சோதிக்கிறது என்று கூறிய அவர், வளர்ந்த நாடுகளின் பொருள்சார் வளர்ச்சியைப் பார்க்கும் போது, அனைத்துக் குறைபாடுகளுக்கும் ஆட்சியாளர்களையே குற்றம் சாட்டும் போக்கு உருவாகுவதாகவும் எச்சரித்தார்.
சீர்திருத்தங்களுக்கு எதிரான தடைகள்
திறந்த பொருளாதாரம், மகாவலி திட்டம், முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் மற்றும் மறைந்த லலித் அத்துலத்முதலி, மறைந்த மங்கள சமரவீர ஆகியோரால் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நவதாராள மயச் சீர்திருத்தங்கள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
சுயநல அரசியல் லாபங்களுக்கான முயற்சிகள் காரணமாக, கடந்த சில தசாப்தங்களில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தீவிர மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் நழுவ விடப்பட்டதாகத் தெரிவித்த கருணாதிலக்க, இதற்கு ஜே.வி.பி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கல்வியின் தரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
தற்போதைய ஆட்சியின் கீழ் கல்வி முறையின் மீது நம்பிக்கை இழந்ததால், நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் இப்போது தங்களது பிள்ளைகளுக்காகத் தனியார் பாடசாலைகளையும் வெளிநாட்டுக் கல்வியையும் நோக்கித் திரும்புகின்றனர், இது முழுமையான கல்வி முறையின் தரம் மற்றும் நடைமுறை மதிப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் காட்டுகிறது.
கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்தங்கள் யுனெஸ்கோ (UNESCO) மற்றும் ஏனைய சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப, அரசியல் கருத் தோட்டங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துப் பங்காளர்களையும் உள்ளடக்கித் திட்டமிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இணக்கப்பாட்டின் அவசியம்
கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு, புதிய உலகப் போக்குகளுக்கு ஏற்றவாறு தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி குறித்த நிலையான தேசியக் கொள்கையொன்றை எட்டுவதற்கு ஆட்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொறுப்பு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘மச்சான்’ நிகழ்ச்சி புதன்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு டிவி சுப்ரீம் அலைவரிசையிலும், டயலொக் டிவி (சானல் 12) மற்றும் PEO டிவி (சானல் 122) ஆகியவற்றிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.


Recent Comments