Saturday, August 29, 2026
Huisதாயகம்400 மில்லியன் அரச நிதி துஸ்பிரயோகம்; அம்பலப்படுத்திய தேசிய கணக்காய்வு ஆணைக்குழு..!

400 மில்லியன் அரச நிதி துஸ்பிரயோகம்; அம்பலப்படுத்திய தேசிய கணக்காய்வு ஆணைக்குழு..!

நாடு முழுவதும் பொது மக்களின் வரிப்பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய தொழிற்துறை திட்டங்கள், முறையான திட்டமிடலின்றி பாதியிலேயே கைவிடப்பட்டதன் காரணமாக சுமார் 40 கோடி ரூபா (400 மில்லியன்) மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் புதிய அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக படஅத்த, திருகோணமலை, புத்தள, அம்பாறை, எம்பிலிப்பிட்டிய மற்றும் ரைகம ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற் பேட்டைகளில் நிர்மாணிக்கப்பட்ட 3 பிரதான நிர்வாகக் கட்டடங்களும், 3 உத்தியோகத்தர் உத்தியோக பூர்வ இல்லங்களும் எவ்வித பயன்பாடும் இன்றி கைவிடப்பட்டுள்ளன. இதனால் இக்கட்டடங்களுக்காகச் செலவிடப்பட்ட 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பொது நிதி முற்றாகப் பாழாகியுள்ளது.

திட்டமிடலின்மையின் உச்சக்கட்டமாக, மில்லியாவ தொழிற் பேட்டையின் மழைநீர் வடிகால் அமைப்பானது தனிநபர் காணி ஊடாகச் செல்லும் வகையில் தவறாக அமைக்கப்பட்டதால், காணி உரிமையாளர் அதற்குத் தடை விதித்துள்ளார். இதன் காரணமாக அந்த வடிகால் பாதையை மாற்றி அமைக்க மேலும் 3 கோடி ரூபா மேலதிகமாக வீணடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய கைவினைப் பேரவையினால் கிராமியக் கைத்தொழில்களுக்கான மூலப் பொருட்களைப் பயிரிடும் நோக்கில் 2021 முதல் 2025 வரை சுமார் 15 கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட திட்டமும் படுதோல்வியில் முடிவடைந்துள்ளது.

76 பயிர்ச்செய்கை இடங்களில் 18 இடங்களில் முளைப்புத் திறன் பூச்சியமாகவும், யட்டியாந்தோட்டை பெலல்லேகம பகுதியில் போக்குவரத்து வசதியே இல்லாத காட்டுப் பகுதியில் 1,050 பிரம்பு கன்றுகள் நடப்பட்டு கைவிடப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதவிர கிரிந்துருகோட்டே, திம்புலாகல, திக்வெல்ல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் சிறு மற்றும் நடுத்தர தொழில் வலயங்களுக்காக காணி அளவீடு மற்றும் துப்பரவுப் பணிகளுக்காக செலவிடப்பட்ட 33 இலட்சம் ரூபாவும், வெல்லவாய தொழிற் பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாவும் போதிய ஒதுக்கீடுகள் இன்றி வீணாகியுள்ளன.

அமைச்சின் சொத்துப் பதிவேடுகளிலும் பெரும் குழப்பம் நிலவுவது கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமைச்சிடம் உள்ள 26 வாகனங்கள் கணக்குக் காட்டப்படாததுடன், பதிவேடுகளில் 34 மோட்டார் சைக்கிள்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அமைச்சிடம் வெறும் 2 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான விசேட கணக்காய்வு அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!