Monday, October 26, 2026
Huisதாயகம்சீரற்ற வானிலையால் 12 பேர் பலி; 150mmக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு..!

சீரற்ற வானிலையால் 12 பேர் பலி; 150mmக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு..!

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் 150 mmக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் சீரற்ற வானிலை நிலவி வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திப்பவல் பகுதியில் 195.7mm மழை பதிவாகியுள்ளதுடன், கேகாலை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.

இந்தச் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மழைநீரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 14 பிரதான நீர்தேக்கங்களின் வான் பாய்ந்து வருவதுடன் குகுலே கங்கை, பொல்கொல்ல, விமலசுரேந்திர, லக்ஷபான, மேல் கொத்மலை, தம்புள்ளை இப்பன்கட்டுவ, கலா வாவி, தெதுரு ஓயா, நோர்ட்டன் கேனியன் மற்றும் இராஜாங்கனை ஆகிய நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தம்புள்ளை ஓயா நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி நீரும், கலா வாவியின் இரண்டு அவசர வான் கதவுகள் 6 அங்குல உயரத்திற்குத் திறக்கப்பட்டு நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

இராஜாங்கனை நீர்தேகத்தின் 8 வான் கதவுகள் (அதில் 6 கதவுகள் மூலம் வினாடிக்கு 3,827 கன அடி நீர்) திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

விக்டோரியா நீர்தேக்கம் தனது அதிகபட்சக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படவுள்ளதுடன், காசல்ரீ நீர்தேக்கமும் வான்பாயும் மட்டத்தை அடைந்துள்ளது.

இதனால் ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்களைச் சுற்றியுள்ள தாழ்நில மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவசர அனர்த்த சூழ்நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!