Monday, November 23, 2026
Huisதாயகம்வடக்கின் 132 பாடசாலைகளின் புனரமைப்பு பணிகள் நிலுவையில்; ரூ. 53.29 மில்லியன் தேவை..!

வடக்கின் 132 பாடசாலைகளின் புனரமைப்பு பணிகள் நிலுவையில்; ரூ. 53.29 மில்லியன் தேவை..!

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தின் 281 மாகாணப் பாடசாலைகளில், 132 பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எஞ்சிய பணிகளை நிறைவு செய்ய 53.29 மில்லியன் ரூபாய் மேலதிகமாகத் தேவைப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் புனரமைப்புக்கும் விசேட நிதி ஒதுக்கீட்டுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

வடமாகாணத்தில், குறிப்பாக வன்னித் தேர்தல் மாவட்டத்தில், புயலால் சேதமடைந்த வகுப்பறைகள், கூரைகள், சுற்றுச் சுவர்கள், நீர்வழங்கல் மற்றும் சுகாதார வசதிகள் பல பாடசாலைகளில் முழுமையாகச் சீரமைக்கப்படாததால், மாணவர்களின் அன்றாடக் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பி. தனது 2026.06.24ஆம் திகதிய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.

சில பாடசாலைகளில் வருடாந்த சிறுதிருத்த நிதியிலிருந்து தற்காலிகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதிலும், புயலால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாகச் சீரமைக்க அந்த நிதி போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய நிலை, மாவட்ட வாரியான சேத மதிப்பீடுகள், இதுவரை வழங்கப்பட்ட நிதி, நிலுவையிலுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் மற்றும் விசேட நிதி ஒதுக்கீட்டின் தேவை ஆகியவற்றை ஆராய்வதற்காக, இவ்விடயத்தைக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அடுத்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்க்குமாறு அவர் கோரியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இக்கோரிக்கையை முன்மொழிவு இல. 622 ஆகப் பதிவு செய்த பாராளுமன்றச் செயலகம், அதனை அடுத்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்குக் குழுத் தலைவரின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கவுள்ளதாக 2026.07.13ஆம் திகதிய கடிதத்தில் தெரிவித்தது.

குறித்த முன்மொழிவு தொடர்பான அறிக்கையை ரவிகரன் எம்.பிக்கு விரைவாக அனுப்புமாறும், அதன் பிரதிகளைத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் குழுச் செயலாளருக்கு வழங்குமாறும் அமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்டது.

அமைச்சின் பதில் அறிக்கையின்படி, வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஏற்பட்ட சேதம் 196.22 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 142.93 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 149 பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் தித்வா புயலால் 2,141 அரச பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 958 பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், 1,183 பாடசாலைகளில் பணிகள் நிலுவையில் உள்ளன.

நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு ஏற்பட்ட சேதம் 13,135.47 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8,274.24 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகளுக்குத் தேவையான 4,795.98 மில்லியன் ரூபாய் எதிர்காலத்தில் ஒதுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் மொத்தமாகத் தரவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் எந்தெந்தப் பாடசாலைகளில் என்னென்ன பணிகள் நிலுவையில் உள்ளன என்பது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

வடமாகாணத்துக்குத் தேவையான 53.29 மில்லியன் ரூபாய் எப்போது விடுவிக்கப்படும் என்பதும், ரவிகரன் எம்.பி. கோரிய விசேட நிதி ஒதுக்கீடு தொடர்பான முடிவும் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!