கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட டித்வா புயல் அனர்த்த நேரத்தில் கிளிநொச்சிப் பகுதியில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தத மக்கள் தங்கியிருந்த முகாம் ஒன்றிற்கு சமைத்த உணவு கொண்டு சென்ற யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரை, அந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்து நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த கிராமசேவகர்,
சமைத்த உணவுகள் அரச சுற்றுநிரூபத்தின் படி சுகாதாரப் பரிசோதகரின் பரிசோதனையின் பின்னரே பரிமாற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கபடுத்தி உணவு வழங்குவதை தடுத்து நிறுத்தியதும் அதன் பின்னர் அதனைக் கேட்காது எம்.பி கிராமசேவகரை தாக்கியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம சேவகர் கூறியிருந்தமையும் அனைவருக்கும் தெரிந்ததே.
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம சேவையாளர் பொலிஸாருக்குக் கொடுத்த முறைப்பாட்டில், எம்.பி. தம்மை – தமது ஆணுறுப்பை – இலக்கு வைத்து காலால் எட்டி உதைத்தார் எனினும், தான் தந்திரோபாயமாக வளைந்தமையால் அந்த உதை தமது அடிவயிற்றில் விழுந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதன் பின்னரும் இளங்குமரன் எம்.பியை பொலிசார் கைது செய்யவில்லை என அறிந்து கிராமசேவகர்கள் கவனயீர்ப்பு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான சுமந்திரனின் கவனத்திற்கு பல கிராமசேவகர்கள் அறியப்படுத்தியதுடன் கண்கண்ட சாட்சிகளாக 46 பேரின் கையொப்பத்துடன் மேற்படி கிராம சேவையாளரை நாடாளுமன்ற உறுப்பினர் காலால் உதைத்து தாக்கிய விடயத்தை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்கள்.
அதன் அடிப்படையில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை முன்வைத்து விடயத்தை மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த சுமந்திரன்,
“சம்பந்தப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர், அவரது நகர்வுகளும் நடவடிக்கைகளும் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய ஒருவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் 10 மாத காலம் கோரியிருப்பது பெரும் அபத்தம். இதில் பெரும் அரசியல் தலையீடுகள் இருக்கின்றன” – என்று மன்றுக்குச் சுட்டிக் காட்டினார்.
இத்தகைய மோசமான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க பொலிஸார் நீதிமன்றில் 10 மாத கால அவகாசம் கோரி பெற்றிருப்பது மிக வேடிக்கையான விடயம்.
சுமந்திரன் சுட்டிக் காட்டிய விடயங்களை அடுத்து, ஜனவரி 16ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்து மன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கும் படி கிளிநொச்சி பொலிஸின் குற்றவியல் விடயங்களுக்குப் பொறுப்பான அதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டார் எனத் தெரிய வருகிறது.
அதன் பின்னரே எம்.பி நீதிமன்றில் ஆயரானதாகத் தெரிய வருகின்றது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் பொலிசார் இளங்குமரன் எம்.பிக்கு மிகவும் ஆதரவாக நடந்துள்ளார்கள் என கிராமசேவகர்கள் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Recent Comments