முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவத்தின் குறித்த பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 07.01.2025இன்று பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
பாராளுமன்றில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பிற்பகல் 07.01.2025இன்று 04.00மணியளவில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
அந்த வகையில் இக்கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுர குமாரதிசாநாயக்க, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் வருகை தந்திருந்தனர். அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.
அந்த வகையில் முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்புத் தொடர்பில் பேசப்பட்டது.
குறித்த கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயத்தில் 44பேருக்கு காணிகள் விடுவிக்க வேண்டியிருந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்களின் காணிகள் விடுவிப்புச் செய்யப்பட்டு விட்டதாகவும், இன்னும் குறிப்பிட்ட அளவானவர்களுக்கே கணிகள் விடுவிக்க வேண்டியுள்ளதாகவும் இதன் போது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சில அதிகாரிகளால் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில் குறுக்கீடு செய்து அதிகாரிகளால் வழங்கப்படுகின்ற தகவல்கள் தவறானவை என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.
கேப்பாப்பிலவில் ஏற்கனவே இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப் பட்டிருக்கின்றன. எனினும் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும், 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது என்பதை இதன் போது சுட்டிக்காட்டினேன்.
இதன் போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளுக்கு பதிலாக பதிலீட்டுக்காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் இராணுவத்தினரால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பிழையான தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
அத்தோடு மக்களுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்படவில்லை. சீனியாமோட்டை என்னுமிடத்தில் சிறிய காணித் துண்டுகளில் தற்காலிகமாக வீடுகள் அமைத்து கேப்பாப்புலவு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தினேன்.
அதேவேளை முறையற்ற விதத்திலேயே மக்களுக்கு அங்கு வீடுகள் அமைக்கப்பட்டு கேப்பாப்புலவு மக்கள் தற்காலிகமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன் போது சுட்டிக்காட்டினேன்.
எதிர்காலத்தில் இராணுவத்தினர் காணிகளை விடுவித்த பிற்பாடு சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவீர்கள், அதுவரை சீனியா மோட்டைப்பகுதியில் தற்காலிகமாகவே குடியேற்றப்படுகின்றீர்கள் என்ற அரச அதிகாரிகளின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அங்கு தற்காலிகமாக குடியேறித் தங்கியுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன் போது வெளிப்படுத்தியிருந்தேன்.
இந்நிலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கையுடனேயே கேப்பாப்புலவு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற விடயத்தினையும் இதன் போது ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியிருந்தேன்.
இந்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு தொடர்பான உண்மையான விபரங்களை முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமிருந்தும், கரைதுறைப்பற்று பிரதேச செயலரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இதன் போது ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன்.
இந்நிலையில் இராணுவத் தளபதியிடம் குறித்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பான ஒரு அறிக்கையினை தமக்கு தருமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.
இதுதொடர்பில் நானும்முல்லைத்தீவு மாவட்ட செயலாளருடனும், கரைதுறைப்பற்று பிரதேச செயலருடனும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் – என்றார்.


Recent Comments