வவுனியா சிதம்பரபுரம் ஶ்ரீ நாகராஜா வித்தியாலயத்தினை தரம் 1C பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கையெடுக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுனர், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயமானது தற்போது தரம் 2 பாடசாலையாக இயங்கி வருகின்றது.
1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுமார் 4 ஏக்கர் விஸ்தீரணமுடைய குறித்த பாடசாலையில் தற்போது 615 வரையிலான மாணவர்களும் 32 ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 35 பேர் பணிபுரிகின்றனர்.
இங்கு தரம் 12, 13 வகுப்புக்கள் 3 ஆண்டுகளாக இடம்பெற்ற போதிலும் கல்வி திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமையினால் கல்விகற்ற மாணவர்கள் அருகிலுள்ள கோமரசங்குளம் மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தூரம் மற்றும் அமைவிடத்தின் அடிப்படையில் இப்பாடசாலையில் தரம் 12,13 வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளமை காலத்தின் தேவையாகும்.
மேற்படி பாடசாலையினை தரமுயர்த்துதல் தொடர்பில் வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு மற்றும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் நான் கோரிக்கை முன்வைத்திருந்தேன்.
மிகவும் அதிகஸ்ர பகுதி மாணவர்களை கொண்ட இப்பாடசாலையினை குறித்த பகுதியின் நலனை கருத்திற் கொண்டும் மாணவர்களின் சிறந்த கற்றல் நடவடிக்கையின் பொருட்டும் தரம் 1C பாடசாலையாக தரமுயர்த்த ஆவன செய்யுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Recent Comments