Tuesday, August 4, 2026
Huisதாயகம்பண்டார வன்னியன், பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது எமது வரலாற்றுக் கடமை..!

பண்டார வன்னியன், பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது எமது வரலாற்றுக் கடமை..!

தமிழர்களின் வீரத்தினைப் பறைசாற்றுகின்ற வகையிலான வரலாற்றினையுடைய வன்னி மன்னன் பண்டாரவன்னியன், பால்ராஜ் போன்றவர்களை நினைவு கூருவது தமிழர்களின் வரலாற்றுக் கடமை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடந்த மேமாதம் இலங்கை நாடாளுமன்றில் பால்ராஜிற்கு தாம் அஞ்சலி செலுத்தியமைக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், பெரும்பான்மை இனத்தவர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்ததாகச் சுட்டிக் காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவ்வாறான எதிர்ப்புக்களைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லை எனவும் இவ்வாறான நினைவு கூரல்களும், அஞ்சலிகளும் தம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முற்றவெளி மைதானத்தில் 02.08.2026நேற்று இம்பெற்ற தமிழர் பாரம்பரிய வீரக்கலை வீரர்களின் மதிப்பளிப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நிகழ்வில் எனக்கு மிகவும் கவர்ந்த விடயம் என்னவெனில், கேடயத்தைத் தாங்கியவாறு இடம்பெற்ற வாள்ச் சண்டையாகும்.

கடந்த 1803ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 223ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்றதொரு ஆகஸ்ட் மாதத்தில் முல்லைத்தீவில் நிலை கொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள்மீது மாவீரன் பண்டார வன்னியன் தாக்குதல்களை மேற்கொண்டு ஆங்கிலேயப் படைகள் நிலை கொண்டிருந்த ஒல்லாந்தக் கோட்டைக்குள் புகுந்து ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றினான்.

ஆங்கிலேயப் படைகள் பீரங்கிகளுடனும், துப்பாக்கிகளுடனும் மிகவும் பலமாக எமது மண்ணில் நிலைகொண்டிருந்த போதும், இவ்வாறான வாள்களையும், கேடயங்களையும், ஈட்டிகளையும் பயன்படுத்தியே மாவீரன் பண்டார வன்னியன் தனது தமிழர் படையுடன் இணைந்து ஆங்கிலேயரது கோட்டைக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தினான். அன்னியப் படைகளை வென்று வாகை சூடினான் என்று வரலாறுகள் கூறுகின்றன.

எமது வன்னி மன்னன் பண்டாரவன்னியன் வெற்றி கொண்ட அந்த ஒல்லாந்தக் கோட்டையின் சிதைவுகள் தற்போதும் முல்லைத்தீவு மாவட்டசெயலக வளாகத்தில் காணப்படுகின்றன.

மாவீரன் பண்டாரவன்னியனின் இந்த வீரதீரச் செயற்பாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தொடர்ச்சியாக நினைவுகூர்ந்து வருகின்றோம்.

இதை ஏன் இங்கு தெரிவிக்கின்றேன் என்றால், வீர விளையாட்டுக்களில் யாரும் தமிழர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இவ்வாறாக எமது பூர்வீகப் பரம்பரைகள் எவ்வாறு வீரம் செறிந்திருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக வரலாறுகள் பல காணப்படுகின்றன.

அதன் பின்னரான விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த வரலாற்றினையும் அனைவரும் அறிவீர்கள். உலகநாடுகளே வியந்துபார்க்கும் அளவில் அவர்களின் வீரதீர செயற்பாடுகள் இருந்தன.

அத்தகைய பரம்பரைவழியில் வந்த எம்மவர்களிடமும் வீர எண்ணங்களே குடிகொண்டிருக்கும். அவர்களும் வீரம் செறிந்தவர்களாகவே இருப்பார்கள்.

மேலும் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் தமிழ் மக்களின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றது.

இந்நிலையில் பாராளுமன்றில் கடந்த மே மாதம் எங்களுடைய மண்ணின் மைந்தன் பால்ராஜ் அவர்களுக்கு பாராளுமன்றில் வீரவணக்கத்தையும், அஞ்சலிகளையும் செலுத்தியிருந்தேன்.

அதற்கு எதிர்க்கட்சியைச் சேரந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுமையாக எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் ஆளும் தரப்பினர் அதற்கு எவ்வித எதிர்வினைகளையும் ஆற்றியிருக்கவில்லை என்பதையும் இந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வீரஞ் செறிந்த வரலாறுகளையுடைய எம்மவர்களையும், அவர்களின் வீரதீர செயற்பாடுகளையும் நினைவுகூரவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும். நினைவுகூரல் என்னும் எமது வரலாற்றுக் கடமையினை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

யாருடைய கூச்சலுக்காகவும் பயந்துகொண்டு, இத்தகைய நினைவு கூரல்களைச் செய்யாமல் அடங்கி ஒடுங்கி இருக்க மாட்டோம்.

அத்தோடு தற்போது இந்த வீரவிளையாட்டுக்கள் இடம்பெறும் இந்த முற்றவெளி மைதானத்தில்தான் அன்று விடுதலைப் புலிகளின் காலத்தில், கடற்புலிகளின் ஏற்பாட்டில் சனத்திரள்களின் மத்தியில் மிகவும் சிறப்பான முறையில் எழுச்சிப்பாடகர் தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்வு இடம்பெற்றது. அதனையும் இந்த நேரத்தில் மீட்டிப் பார்க்கின்றேன். இவ்வாறாக முல்லைத்தீவு மண்ணிற்குப் பல பெருமைகள் உண்டு.

இப்படியாக எம்மவர்கள் தமிழர்களின் வீரக் கலைகளை கற்றுக் கொண்டு, அவற்றை வெளிப்படுத்திக்காட்டும் போது மிகவும் மனமகிழ்வாக உள்ளது – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!