Tuesday, August 11, 2026
Huisதாயகம்மாநகர ஆணையாளரின் இடையூறுகளுக்கு எதிராக போர்க்கொடி; அடையாளப் பகிஷ்கரிப்பு..!

மாநகர ஆணையாளரின் இடையூறுகளுக்கு எதிராக போர்க்கொடி; அடையாளப் பகிஷ்கரிப்பு..!

​யாழ். மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர சபை உறுப்பினர்கள் இன்றையதினம் (11) அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

​45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் கூட்டுப் பங்களிப்புடன் குறித்த அடையாளப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

​இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

​இதன்போது அதிகாரிகளின் இந்த முறையற்ற செயற்பாடுகளினால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் மக்களின் அடிப்படை நலன்களை உரிய முறையில் நிறைவேற்றவும், மக்களை சென்றடையவும் முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சபையின் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

​மாநகர சபையின் ஊடாக மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அத்தியாவசிய சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பனவற்றில் அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதங்கள் ஏற்படுத்தி வருவதாகவும், மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்புகளுக்குள் தலையிட்டு முடக்க முற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இன்றைய சபை அமர்வின் போது குறித்த அதிகாரிகளின் திட்டமிட்ட இடையூறுகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் தீவிரமாக விவாதித்திருந்தனர்.

​இதன்போது, அதிகாரிகளின் இத்தகைய தன்னிச்சையான செயற்பாடுகள் சபையின் நற்பெயருக்கும் மக்களின் உரிமைகளுக்கும் எதிரானது என விவாதிக்கப்பட்டு, அது தொடர்பான தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

​குறித்த தீர்மானத்தை அடுத்து, அதிகாரிகளின் போக்கைக் கண்டிக்கும் வகையிலும், அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லும் நோக்க்குடனேயே இன்றைய அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் குறித்த விடயம் தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் ஊடகங்கள் கருத்துக் கேட்ட போது ஊடகங்களை சந்திக்கவோ கருத்து கூறவோ தனக்கு அவசியம் இல்லை என அவர் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!