Thursday, August 20, 2026
Huisதாயகம்தமிழர்களது காணிகளில் உப்பளம்; சஜித்தின் கவனத்திற்கு கொண்டு வந்த ரவிகரன் எம்.பி..!

தமிழர்களது காணிகளில் உப்பளம்; சஜித்தின் கவனத்திற்கு கொண்டு வந்த ரவிகரன் எம்.பி..!

முல்லைத்தீவு – கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் ஒருவரால் சட்டவிரோதமாக அத்துமீறி உப்பளம் அமைக்கப்படுகின்ற விடயம் தொடர்பில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சுட்டிக் காட்டியிருந்தார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 19.08.2026இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்படி விடயத்தினை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் இவ்வாறு தமிழ்மக்களின் தனியார் வயல் காணிகளை அத்துமீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தனியார் ஒருவர் உப்பளம் அமைக்கின்றமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது வன்னிப் பகுதியிலோ வடமாகாணத்திலோ தனியார் காணிகளை ஆக்கிரமித்து உப்பளங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் 54ஏக்கர் தனியார் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்கப்பட்டு வருவதாகவும், மாத்தளன் பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு ஏற்ற அரச காணிகள் காணப்படுவதாகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச,

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன் கலந்துரையாடி அந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த விடயத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராயப்படுமென அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றும் போது பராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விடயம் தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் அத்துமீறி அமைக்கப்படும் உப்பளம் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக முல்லைத்தீவில் குரல் எழுப்பி வருகின்றோம்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால் தடுத்து நிறுத்துவதற்குரிய கடிதங்கள் உரிய தரப்பினருக்கு அனுப்பப்பட்டன.

இவ்வாறான அடாத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவது மகாவலி அதிகார சபை தான். இது தொடர்பாக கடந்த 2026.03.12 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் கௌரவ. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கௌரவ அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்பட்டது.

குறித்த பகுதி தனியார் காணியில் அமைக்கப்படவில்லை என மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினரால் அன்றைய தினம் குறிப்பிடப்பட்டது.

அமைச்சர் அவர்களால் இப்பிரச்சினையை மாவட்டச் செயலாளர் தலைமையில் ஆராயுமாறு அன்றைய நாள் அமைச்சரால் பணிக்கப்பட்டது.

பின்னர் எமது, கோரிக்கைக்கு அமைய , மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரின் உத்தரவுக்கு அமைய குறித்த பகுதி தனியார் காணியே என நில அளவை அத்தியேட்கரால் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், தனியார் காணியில் அமைக்கப்படும் மேற்படி உப்பளம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு 2026.07.28 அன்று கடிதம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டது.

அதன் பின்னரும் இலங்கை மகாவலி அதிகார சபை அதற்கு இணங்காத வகையில் தன்னிச்சையாக செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.

மகாவலி அதிகார சபை இந்தத்தீவிலுள்ள அரசாங்கத்துக்கும் கட்டுப்படாமல் வடகிழக்கில் இனப் பரம்பலை மாற்றும் எண்ணத்தோடு தன்னிச்சையாக செயற்படும் ஓர் அமைப்பாகவே செயற்படுகிறது.

கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் அடாத்தாக அமைக்கப்பட்ட உப்பளமும் அதற்கு ஒரு சான்று என இப் பேரவையில் மீண்டும் பதிவு செய்கிறேன். தேவைப்பட்டால் இவற்றுக்கான சான்றுகளை உரிய தரப்பினர்க்கு வழங்குவோம் எனவும் தெரிவிக்கின்றேன் – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!