வவுனியா வடக்கில் மனித – யானை மோதல் ஏற்கனவே தீவிரமாகக் காணப்படும் நிலையில், கிவில் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக சுமார் 13,000 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டின் வனப்பாதுகாப்பு பிரதேசங்களும், தேசிய பூங்காக்களும் வேட்டைக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் வனவளங்களை அழிப்பவர்களால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள விடயம் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களே இந்த விடயத்தை சபையில் சுட்டிக்காட்டினார்.
மேலும், திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களும் எதிர்கால நோக்கற்ற செயற்பாடுகளும் வன வளங்களுக்கும் பொது மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், வவுனியா வடக்கில் ஒரு மணி நேரத்திற்கு முன்புகூட 45 வயதுடைய விவசாயி ஒருவர் வயலுக்குச் சென்றபோது யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த ஊருக்கு அண்மையில் உள்ள குளவிசுட்டான் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை வவுனியா வடக்கின் நயினாமடு பகுதியில் அமைக்க ஆரம்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தற்போது அங்கிருந்து மிகவும் குறைந்த மக்கள் வாழுகின்ற போகஸ்வெவ பகுதிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் சபையில் குறிப்பிட்டதோடு குறித்த அலுவலகத்தினை நயினாமடு பகுதியிலேயே அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், வவுனியா நகரப் பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், வீடுகளில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதற்குக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்கும், குரங்குகளின் தொல்லைக்குத் தீர்வு காண்பதற்கும் விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.


Recent Comments