தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெள்ளிக்கிழமை (6) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல என்பதோடு; அதற்கு தமிழர்களின் வரலாற்று வாழ்வில் தொன்மை மிகு ஆயிலும் கிடையாது எனும் வாதம் பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்பட்ட போதும் அது தமிழர்களின் விழாவாக்கப்பட்டு விட்டது. இப்பண்டிகை மலையகத் தமிழர்களின் மத்தியில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகையில் இவ்வருடம் தேசிய தீபாவளி விழா மாத்தளையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் வடக்கு – கிழக்கு தமிழர்களின் வாழ்விலும், மலையக தமிழர்களின் வாழ்விலும் தீமையின் சக்தி ஒழிய தேசிய மக்கள் சக்தியை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி என்ன திட்டங்களை முன்வைக்கப் போகின்றார் என்பதே மக்களின் கேள்வி
நாட்டில் “பாதாள உலகை இல்லாமல் செய்வேன், போதைப் பொருள் விநியோக மற்றும் பாவனையை ஒழிப்பேன், திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுப்பேன், அரசியல் மற்றும் அதிகார வள கொள்ளையர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவேன்” என ஜனாதிபதி கூறுவதை வரவேற்கின்றோம். இதற்கு அப்பால் நாட்டில் தமிழர்கள் முகங்கொடுக்கும் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதமே காரணமாகும்.
அதன் இருள் நாட்டில் தொடர்ந்து சூழ்ந்திருக்கிறது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதனை பாதுகாப்பதாகவே தமிழர்கள் உணர்கிறார்கள். இக்காரணத்தினாலே தமிழர்கள் வாழ்வில் அரசியல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக வாழ்வில் விடியலை காண முடியாதுள்ளது.
மாற்றம் எனக் கூறி தமிழ் மக்களினதும் வாக்குகளை பெரும்பான்மையாகப் பெற்று பெரும் பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல தசாப்தங்களாக தொடரும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை கொடுப்பதற்கு இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பாரிய இனப்படுகொலையுடன் முடிவுற்ற யுத்தத்தின் போது அரச படையினர் புரிந்ததாகக் கூறப்படும் யுத்த குற்றங்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு தயக்கம் காட்டுவதோடு, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துவதற்கோ, சிங்கள பௌத்த மயமாக்கப்பட்ட தொல்பொருள் திணைக்களம் சிங்கள பௌத்த துறவிகளோடு சேர்ந்து முன்னெடுக்கும் நில ஆக்கிரமிப்பினை தடுப்பதற்கோ, இராணுவத்தின் வசமிருக்கும் மக்களின் காணிகளை முழுமையாக விடுவிப்பதற்கோ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மட்டுமல்ல, தேர்தல் காலத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக கூறிய உறுதிமொழியும் இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருப்பதும் தமிழர்கள் வாழ்வில் தொடரும் இருளாகவே நாம் கொள்கின்றோம். தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த அரசியல் கருத்தியல் அரக்க சக்தி தோற்கடிக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
இது இவ்வாறிருக்க மலையகத் தமிழர்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படாதது மட்டுமல்ல, அவர்களின் தேசிய இனத்துவ அடையாளங்களை சிதைப்பதற்கான திட்டங்களே தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் தொடர்கின்றன.
மலையக தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமைக்கு அப்பால் தேசிய அரசியல் பொருளாதார அபிவிருத்தி நீரோட்டத்தில் இணைவதற்கான எத்தகைய உரிமையையும் கொடுக்கக் கூடாது எனும் பேரினவாத சிந்தனை இருள் மலையக தமிழர்களை கவ்வியுள்ளது. இதனை நீக்குவது எப்போது? நீக்குவது யார்?
வடக்கின் தேர்தல் பிரச்சார மேடைகளின்போது தற்போதைய ஜனாதிபதி “அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்” என வாக்குறுதி அளித்தது போல மலையகத்தில் மலையக மக்களுக்கு காணி வழங்குவோம்” என கூறியதை அனைவரும் அறிவர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்களை கடந்துள்ள நிலையிலும் அது தொடர்பில் எந்த விதமான கொள்கை திட்டம் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல; மலையகத்தில் பயிரிடப்படாமல் இருக்கும் வெற்றுக் காணிகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்திருப்பது மலையகத் தமிழ் உழைக்கும் வர்க்கத்தை அடிமையாக வைத்திருப்பதற்கான தீய அரக்க செயற்பாட்டு சிந்தனை என்றே நாம் நினைக்கின்றோம்.அரசு சேவைகள்
தமிழர் பகுதிகளில் பல தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இவ்வருடம் தேசிய தீபாவளி விழா மலையகத்தின் மாத்தளையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழா அரசின் வெறும் அரசியல் களியாட்டம் ஆக்கப்படுமாயின் அது நாட்டின் அரசியல் தோல்வியாகவே அமையும்.
வடக்கு, கிழக்கு தமிழர்கள் மத்தியில் கட்டமைப்பாக காணப்படும் வேற்றுமைகளை களைந்து தமிழரின் தேசியமும் தேசமும் காக்க ஓரணியில் மக்கள் சக்தியாக திரளவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுப்பதோடு, மலையக தமிழர்களும் தங்களுக்கு எதிரான இருளின் சக்தி யார் என்பதை அடையாளப்படுத்தி அதற்கு எதிரான மக்களின் சக்தியாக ஒன்றுபடுவதோடு ஒட்டுமொத்த தமிழர்கள் தமது சக்தியை வெளிப்படுத்தி வாழ்வுக்கு எதிரான அழிக்கும் சக்திகளுக்கு எதிராக எழுச்சி கொள்வதே நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கும் என்பதே அனைவரினதும் நம்பிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.


Recent Comments