நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளபோதிலும், அரசாங்கமும் அதனுடன் தொடர்புடைய அமைச்சர்களும் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2025ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி, உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 48 சதவீதத்தால் அதிகரித்து, 24.7 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
இதில் குடிநீர் போத்தல்களுக்காக மட்டும் சுமார் 2 இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.
தினசரி உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கை 1,200 வரை உயர்ந்துள்ளதுடன், விருந்தினர்களுக்கான உணவுச் செலவு 109 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற உணவகத்தை மூடிவிட்டு, வீட்டிலிருந்தே உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து உட்கொள்வோம் என்றும் மக்கள் பணத்தைச் சேமிப்போம் என்றும் கூறினார்கள்.
ஆனால் இன்று அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது 24.7 கோடி ரூபாவை நாடாளுமன்ற உணவுக்காகச் செலவிட்டிருப்பது எந்த வகையில் நியாயமாகும்? என கேள்வியெழுப்பினார்.


Recent Comments